.

Sunday, January 16, 2011

தனிமைச் சிறகுகள் - முதல் பயணம்

இன்றைய உலகில் இளைஞர்களின் வாழ்க்கை என்பது நாடோடி பொழைப்பாதான் ஆயிடுச்சு.. தங்கள் படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடி சொந்த ஊர்களை விட்டு வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டுட்டே இருக்கோம்.. :-(.. அப்படி வெளியிடங்கள்ல இருக்கற நமக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைக்கும்.. அந்த அனுபவங்கள் நல்ல விதமாகவும் கெட்ட விதமாகவும் இருக்கும்.. எனக்கும் அந்தமாதிரி அனுபவங்கள் இருக்குங்கறதால எனக்கு தெரிஞ்ச விசயங்களை உங்ககிட்ட பகிர்ந்துக்க விரும்பறேன்..

காலேஜ் முடிக்கற வரைக்கும்.. வெளியூர் ட்ரிப் போன நாட்களைத் தவிர.. வீட்டை விட்டு பிரிஞ்சதே இல்லை.. காலேஜ் முடிக்கற வரைக்கும் ஒரே ஜாலிதான்.. எங்க பேமிலில மெம்பர்ஸ் ஜாஸ்திங்கறதால.. வீட்ல இருந்தால் போர் அடிக்கும்ங்கற நேரங்கள் எல்லாம் ரொம்பக் கம்மி.. ஏதாவது டைம் பாஸ் ஆயிட்டே இருக்கும்.. படிக்கற விசயங்களுக்குக்கூட வீட்ல என்னை எதுவும் கேக்க மாட்டாங்க.. "மகனே!! நாங்கள்லாம் படிக்கல.. உனக்கு எங்களை மாதிரி கஷ்ட ஜீவனம் கூடாது.. படிக்க வைக்கிறோம்.. அதுல இருக்கற கஷ்டங்கள் எல்லாம் எங்களுக்குத் தெரியாது.. எப்படி முடியுதோ அப்படி செய்யின்னு சொல்லிடுவாங்க..".. படிச்சு முடிச்சுட்டு ஊர் சுத்திட்டு இருந்தேன்.. எங்கே வேலைக்குப் போறது.. என்ன பண்றதுன்னே தெரியல..

சென்னையின் என் அண்ணன் ஒருவர் வேலை பார்த்துட்டு இருந்ததால.. அங்கே என்னை அனுப்பி வைச்சாங்க.. நானும் வேலைக்குப் போறேன்.. நானும் வேலைக்குப் போறேன்னு ஊர் முழுக்க சொல்லிட்டு கிளம்பியாச்சு.. ஊர்ல இருந்து திண்டுக்கல்ல இரயில் ஏர்ற வரைக்கும் பசங்க வந்தானுங்க.. இரயில் கிளம்பி 5வது நிமிசத்தில் எனக்கு கிடைத்த முதல் அனுபவம் "தனிமை".. ம்ம்ம்ம்.. தனியாகக் காட்ல விடறதுன்னு சொலவடம் சொல்வாங்க இல்லையா.. அந்த ஃபீலிங் எப்படி இருக்கும்னு உணர்ந்தேன்.. பெற்றவர்களைத் தேடித் திருதிருன்னு ரோட்ல நின்னுட்டு இருக்கற குழந்தையின் உணர்ச்சி என்னவாக இருக்கும்னு புரிஞ்சது அப்போ.. ம்ம்ம்.. வீட்டுக்குப் போறேன்னு அழுகாத குறைதான்னு வைங்களேன்.. ஆனால் இனி திரும்பிப் போக முடியாது..

படத்துல வர்றமாதிரி சென்னையில இறங்கியவுடன் என் அண்ணா நின்னுட்டு இருப்பார்னு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனால் அவரைக் காணோம்.. :-(.. வீட்ல வேற நிறைய சூதானம் சொல்லி அனுப்பி விட்டாங்களா.. கொஞ்சம் (நிறைய..:-)..) பயமாக இருந்தது.. வேலை காரணமாக அவரால் என்னை ரிசீவ் பண்ண வரமுடியல.. அங்கேயிருந்து எப்படி அம்பத்தூர் போறதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.. சென்னையில் கண்டக்டர் எந்திரிச்சு வராம டிக்கெட் குடுக்கறது புதுசா இருந்தது.. பயணிகள் டிக்கெட் காசைக் கொடுத்து ஒருதருக்கு ஒருத்தர் பாஸ் பண்ணி வாங்கிக்கறாங்க.. ஆஹா!! நம்ம ஊர்ல கிட்ட வந்து கேட்டாலே.. மூடு இருந்தாத்தான் டிக்கெட் எடுப்போம்.. இங்கே எதுக்கு வம்புன்னு நானும் அப்படியே வாங்கினேன்.. இடையில் யாராவது காசை அப்படியே எடுத்துட்டு ஓடிட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு கவலையாக இருந்தது.. :-)

அம்பத்தூர் வீட்ல என் அண்ணனை மீட் பண்ணிட்டேன்.. அவரோட மொபைலை என் கையில் கொடுத்து.. நான் நேற்றே வளசரவாக்கத்துக்கு மாறிட்டேன்.. எனக்கு இப்போ வேலை இருக்கு.. இந்த மொபைல்ல பாரு.. ஏரியா நேம் டிஸ்பிளே ஆகுது இல்லையா.. நான் சொல்ற பஸ் நம்பர்ல ஏறி.. மொபைலைப் பார்த்துட்டே இரு.. வளசரவாக்கம்னு வந்தவுடன் இறங்கிடுன்னு சொல்லி அனுப்பிட்டார்.. மொபைல்ல அதேமாதிரியே டிஸ்பிளே வந்தது.. கூட்டத்துல இறங்கறதுக்குள்ள அடுத்த ஸ்டாப்பே வந்துட்டுச்சு.. சோ.. சென்னையில் தள்ளுங்கன்னு சொல்லிட்டு இறங்கறது வேலைக்கு ஆகாது.. தள்ளிட்டு இறங்கறதுதான் ஆகும்னு புரிஞ்சது..

என்னுடைய முதல் இண்ட்ர்வியூ.. லிட்டில் மவுண்டன்னு (சின்ன மலை) ஒரு ஏரியால.. அங்கே போறதுக்கு பேப்பர்ல ஒரு பெரிய மேப்பே வரைஞ்சு கொடுத்தார்.. ஐந்து, ஆறு பஸ் மாறிப் போகனும்னு பஸ் நம்பர் எல்லாம் சொல்லிட்டார்.. மேலும் டவுட் இருந்தா.. போற இடங்கள்ல தைரியமாக விசாரின்னு சொல்லி அனுப்பினார்.. பஸ் ஸ்டாப்புல நல்ல கூட்டம்.. அங்கே ஒரு பொண்ணுகிட்ட போய் லிட்டில் மெளண்டன் எப்படிப் போகனும்னு கேட்டா.. என் மேப்ல இருந்த வழிக்கு அப்படியே ஆப்போசிட்ல வழி சொல்லுச்சு அந்தப் பொண்ணு.. என்னடா இது!! இந்த வழி ரொம்ப ஈசியாக இருக்கேன்னு அந்தப் பொண்ணு சொன்ன வழியிலயே போனேன்.. அந்த இடம் ஒரு 15 நிமிசத்துலயே வந்துடுச்சு.. எல்லாருக்கும் போல முதல் இண்டர்வியூ.. அந்த பில்டிங்குள்ள போகவே கால் கூசிச்சு.. மனசெல்லாம் படபடப்பு.. ரொம்ப தயக்கமாக இருந்தது.. செக்யூரிட்டிகிட்ட என் பேரை ஃபீட் பண்றவரைக்குமே.. எந்த நேரமும் திரும்பிடற மூடுலயே இருந்தேன்..

திரும்பி வந்து நடந்ததை எல்லாம் அண்ணன்கிட்ட சொன்னா.. அடப்பாவி!! உன்னை சுத்தவிட்டு.. ஊரைச்சுத்திக் காட்டிடலாம்னு நினைச்சா இப்படி எஸ்கேப் ஆயிட்டயேன்னு ஓட்டிட்டு இருந்தாங்க..

ஒருமாதத்தில.. தாஜ்கோரமண்டலுக்கு ஆப்போசிட்ல இருக்கற ஒரு BPO கம்பெனியில் வேலை வாங்கினேன்.. வேலை ரொம்ப ஈசியாக இருந்தது.. ஆனால் ரொட்டேசனல் ஷிஃப்ட்ல போட்டுக் கொன்னு எடுத்தாங்க.. நேர நேரத்துக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்கிட்டு.. வீட்டுக்கு வாரத்துக்கு ரெண்டுமுறை மட்டும் போன் பேசிக்கிட்டு.. ரோபோ மாதிரி.. வேலை பார்க்கறது.. ரூமுக்கு வந்து தூங்கறதுன்னு இந்த லைஃப் ஸ்டைல் பிடிக்கவே இல்ல.. அப்புறம் ரெண்டு மூனு கம்பெனிகள் மாறினேன்.. நண்பர்கள் கிடைச்சாங்க.. வெளியே அவங்களோட சுத்த ஆரம்பிச்சேன்..

சென்னையில் 8 மாதங்கள் மட்டுமே இருந்ததால அனுபவங்கள் ரொம்பக் கம்மிதான்.. ஆக்சுவலா BPOவில் சேர்றவங்களுக்கு எல்லாம்.. வாழ்க்கையே தூங்கறதும் வேலை பார்க்கறதுமாகத்தான் இருக்கும்..

சென்னையில் பஸ்ல பிக்பாக்கெட் அடிக்கறதைப் பார்த்திருக்கேன்.. நான் பார்க்கறதையும் பார்த்துட்டேதான் அடிச்சானுங்க.. கொஞ்சம்கூட தயங்கல..

நிறைய ஆந்திரா ஸ்டைல் ஹோட்டல்ஸ் இருக்கு சென்னையில.. வாரவாரம் அங்கேதான் அன்லிமிட்டடு மீல்ஸ் கட்டுவோம்..

பஸ்ல ஒருமுறை தொங்கிட்டுப் போயிட்டு இருந்தப்போ.. சடன் பிரேக் போட்டதில என் கை ஸ்லிப்பாயிடுச்சு.. கடைசி சீட்ல உட்கார்ந்திருந்த ஒருவர்.. கப்புன்னு கரெக்டா என் கையைப் பிடிச்சிட்டார்.. ரொம்ப நேரம் உடம்பு நடுங்கிக்கிட்டே இருந்தது.. அதுல இருந்து.. எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் உள்ளே போக முடிந்தால் மட்டுமே பஸ்ல ஏர்றது.. :-)

என்கூட வேலைப் பார்த்த ஒரு பையனும், பொண்ணும்.. ஒரே அபார்ட்மெண்டாம்.. லவ் பண்ணிட்டு இருந்ததுங்க.. அவங்க லவ் சக்சஸ் ஆகறதுக்கு நிறைய சிக்கல் இருந்தது.. இப்போ என்ன ஆனாங்கன்னு தெரியல.. :-)

ம்ம்ம்.. போதும் இனி உங்களுக்குப் போர் அடிக்கும்..

என் அண்ணனுக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சது.. எங்க வீட்ல என்னையும் அண்ணனோடவே போயிடுப்பான்னு சொன்னாங்க.. காலேஜ்ல ரெண்டு நாள் டூர் போயிட்டு வந்த இடத்துக்கு போய் இருக்கப் போறமேன்னு ரொம்ப எக்ஸைட்டிங்கா இருந்தது.. அடுத்து வரும் நாட்களைப் பற்றித் தெரியாததால பெங்களூர் பஸ்ல ஏறிட்டேன்..

(பயணம் தொடரும்)

பயணத்தின் தொடர்ச்சி:

தனிமைச் சிறகுகள் - பெங்களூர் பயணம்