.

Friday, October 29, 2010

பெங்களூரும்.. பகல் வாழ்க்கையும்..

போன பதிவுல பெங்களூரோட இரவு வாழ்க்கையைப் பற்றி சொல்லியிருந்தேன்.. இந்தப் பதிவுல கொஞ்சம் விடிஞ்ச பிறகு நடக்கற விசயங்களை பற்றிப் பேசுவோம்..

இரண்டு வருடங்களுக்கு முன்னே எலக்ட்ரானிக் சிட்டியில ஒரு கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தேன்.. நைட் ஷிஃப்ட் விடிகாலை 4.30க்கு முடியும்.. என்னோட கம்பெனிக்கும் ஆபிஸூக்கும் 20 நிமிட நடை அவ்லோதான்.. இவ்லோ பக்கத்துல இருக்கறவங்களுக்கு ஆபிஸ்ல வண்டி குடுக்கறதில்லைன்னு ரூல்.. அதனால எப்பவும் ஆபிஸ்ல இருந்து வெளியே வந்தவுடனே ராஜ மரியாதையோட பத்து இருபது பாடிகார்டோடவேதான் (நாய்கள்) என்னோட ரூமுக்கு வருவேன்.. ஆபிஸ்ல இருந்து என்னோட ரூமுக்கு போக ஒரு பெரிய கிரெளண்டை கடந்து போகனும்.. ஒருமுறை இப்படி நடந்து போயிட்டு இருந்தப்போ ஆபிஸ்ல இருந்து என்னோட நண்பர் ஒருத்தர்கிட்ட இருந்து போன் வந்தது.. பேசிட்டு சிரிச்சிட்டே வந்துட்டு இருந்தேன்.. ஏதேச்சையா சத்தமா சிரிச்சுட்டேன்.. அப்போ நான் பார்த்த காட்சியில அப்படியே ஷாக்காகி அந்த இடத்துலயே நின்னுட்டேன்.. ஜுராசிக் பார்க் படம் பார்த்திருப்பீங்க இல்லையா.. அதுல திபுதிபுன்னு நிறைய டைனோசர்ஸ் ஓடிவருங்க பார்த்திருக்கோம்ல.. அந்தமாதிரி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாய்கள் இருக்கும்.. பாய்ஞ்சு ஓடிவந்து என்னை சுத்தி ரெளண்ட் கட்டீடுச்சுங்க.. ஒரு ஐந்து நிமிசம் என்னைப் பார்த்து குலைச்சுட்டு அப்புறம் அதுங்க குழுவுல முடிவு பண்ணீட்டு என்னை ரிலீஷ் பண்ணீட்டு போயிடுச்சுங்க.. இருந்தும் அதுல நாலைஞ்சு பேர் என்னை வீட்டுல விட்டுட்டுத்தான் போனாங்க.. :((

அப்புறம் வேற கம்பெனி மாறியதால வேற வேற இடங்களுக்கு மாறிட்டு இருந்தேன்.. ஒரு ஆண்டுக்கு முன்னாடி மடிவாலான்னு ஒரு ஏரியால இருந்தேன்.. அதுவும் காஸ்ட்லியான ஏரியாதான்.. அங்கே என்னோட ரூமுக்கு பக்கத்துல அதுவும் அந்த ஏரியா போலீஷ் ஸ்டேசனுக்கு முன்னாடி ஒரு வழிப்பறி பண்ணியிருக்காங்க.. ஒருத்தர் நைட் வேலை முடிச்சுட்டு பைக்ல வந்திட்டிருந்திருக்கார்.. கரெக்டா ஒரு டர்னிங்ல ஒரு நாளு பேர் அவரை மடக்கியிருக்காங்க.. அவரும் நம்மளை மாதிரி பைசா எதுவும் எடுத்துப்போகாம உஷாரா ஆபீஸ் போயிட்டு வந்திருக்கார்.. ஆனா விவேக்கை ஒரு படத்துல மடக்கறமாதிரி.. பைக்கை விட்டு இறங்கு தம்பின்னு ரொம்ப மரியாதையா கன்னடத்துல திட்டி நாலு அறை விட்டு கதற கதற அவரோட பைக்கை புடிங்கிட்டு போயிட்டாங்க..

மடிவாலாதான் தமிழ்நாட்ல இருந்து வர்றவங்களும் கேரளாவுல இருந்து வர்றவங்களும் தங்கற ஏரியா.. அதனால ஒவ்வொரு வீக்எண்ட் முடிஞ்சு திங்கட்கிழமை இந்த ஸ்டாப்பிங்ல நிறைய பேர் இறங்குவாங்க.. அப்படி வர்றவங்க சிலரும் இந்த மாதிரி வழிப்பறிகளுக்கு ஆளாகியிருக்காங்க.. ரீசண்டா இந்தமாதிரி விடுமுறைக்கு போயிட்டு வந்த ஒருத்தர்கிட்ட இருந்து ஆறுமாதத்திற்கு முன்ன 20000 ரூபாய் அடிச்சிட்டதா கேள்விப்பட்டேன்.. பாவம்..

இப்படியெல்லாம் போயிட்டிருக்குன்னா இன்னொரு விசயம் பஸ்ல நடக்கற திருட்டுகள்.. பெங்களூர்ல பகல்நேரங்களும் மாலையில இருந்து இரவு நேரங்களும் ரொம்ப டிராஃபிக்கான டைமா இருக்கு.. அதனால பேருந்துகள்ல கூட்டம் நிரம்பி வழியும்.. பெங்களூரோட முக்கியமான பேருந்து நிலையமான மெஜெஸ்டிக்ல இருந்து பஸ் ஏர்றதுனா ஒரு பெரிய டிரையினிங்கே எடுக்கனும்.. ஆனா நாளாக ஆக அதெல்லாம் கத்துக்குவோம்.. அப்படி கூட்டத்துல ஏர்றப்போ பர்ஸையும், மொபைலையும் ஜாக்கிரதையா பார்த்துக்கனும்.. இல்லைனா ரெண்டுமே அம்பேல்தான்.. நாம் மொபைலைக் கையிலயே வைச்சிருந்தாக்கூட நமக்கே தெரியாம அடிச்சிடுவாங்க.. இந்தமாதிரி மொபைல் திருட்டுக்கள் எல்லா இடங்களையுமே நடக்குதுன்னாலும் இங்கே ரொம்ப அதிகம்தான்..

"லாஸ்ட் பட் லீஸ்ட்"டா பெங்களூர்ல இருக்கற பெரிய வழிப்பறிக் கொள்ளைக்காரங்க.. இங்கே இருக்கற டிராபிக் போலீஸ்தான்.. என்னதான் அவங்களை பத்தி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருந்தாலும் இங்கேயும் அவங்களைப் பத்தி எழுதாம இருக்கமுடியல.. பெரும்பாலும் போக்குவரத்து விதிகள் எங்கே மீறப்படுது.. சிக்னல் இருக்கற இடங்கள்லதான் இல்லையா.. சிக்னல் போட்டிருந்தாலும் மதிக்காமப் போறது, யூ டர்ன் போடக்கூடாத இடங்கள்ல வண்டியை வளைக்கறது இந்தமாதிரி தப்புகள்தான் அதிகம் நடக்கும்..

பெங்களூர்ல கரெக்டா ஒவ்வொரு சிக்னலுக்கு அடுத்தும் ஒரு பெரிய மரம் இருக்கு.. சிக்னல்ல பொறுப்பா டிராஃபிக்கை கன்ட்ரோல் பண்ற வேலையை விட்டுட்டு.. கடைமையை செய்ய வேண்டிய இடத்துல இல்லாம மரங்களுக்கு பின்னாடி ஒளிஞ்சு நின்னுகிட்டு விதிகளை மீர்றவங்களை மறைஞ்சிருந்து பிடிப்பாங்க இவங்க.. அதுவே போலீஸ் சிக்னல்ல இருந்தால் பொறுப்பா வண்டி ஓட்டனும்னு நினைப்பு வரும் இல்லையா.. மக்களுக்கு ஒருமுறை விதிகளை மீறி மாட்டிக்காம இருந்துட்டாங்கன்னா திரும்பவும் தப்பு பண்ணனும்னு தோனிடும்.. இதுவே டிராபிக் போலீஷ் கரெக்டா அவங்களோட டியூட்டியைப் பார்த்துட்டு இருந்தாங்கன்னா கண்டிப்பா கொஞ்சம் கொஞ்சமா இந்த விதிமீறல்கள் குறைஞ்சிடும்.. ஏன்னா 3 முறை ஃபைன் கட்டினதுக்கே இப்பவரைக்கும் விதிகளை மீறாம ஓட்டிட்டு இருக்கேன்.. ஹி ஹி ஹி..

அவங்க தன்னோட கடமையைத்தான செய்றாங்கன்னு நீங்க கேக்கலாம்.. கரெக்டுதான்.. ஆனால் அவங்கெல்லாம் தகுந்த நேரத்துல தங்களோட கடமையை செய்தாங்கன்னா இங்க ஏற்படற டிராபிக்ல கால்வாசியை கன்ட்ரோல் பண்ணிடலாம்.. ஆனால் மக்கள்கிட்ட காசு வாங்கறப்ப மட்டும் கடமை தவறாம இருப்பாங்க.. போனவருசம் ஆசியாவிலேயே போக்குவரத்து விதிகளை மீறியதுக்காக அதிகமா வசூலான சிட்டினு பெங்களூரை ரேட் பண்ணியிருந்தாங்களாம்..

நான் பெங்களூர் வந்து நாலரை வருசத்துல 3 முறை டிராபிக்ல ஃபைன் கட்டியிருக்கேன்.. ஆனால் எதுக்குமே ரிஷிஃப்ட் எல்லாம் கொடுத்ததில்லை.. இந்தமாதிரி எவ்வளவு பேர்கிட்ட தினமும் பிடுங்குவாங்க.. அப்போ கரெக்டான கணக்கைக் காட்டினா உலகத்துலயே முதலிடம் கிடைச்சாலும் கிடைக்கும்.. :-)))
அவங்களை ஏன் இந்த பேர் சொல்லிக்கூப்பிட்டேன்னா அவங்க மறைஞ்சிருந்து ஓடிவந்து மடக்கற அழகைப் பார்க்கனுமே.. கண்டிப்பா "அந்த" புரொபெசன்ல இருக்கவங்க தோத்தே போயிடுவாங்க.. அப்படி இருக்கும்.. :-)))

இந்தமாதிரி பலவழிகள்ல வெளிமாநிலங்கள்ல இருந்து வர்றவங்க கிட்டேயிருந்து இங்கே திருட்டுகள் நடக்குது.. அதனால முடிஞ்சவரைக்கும் நம்ம சேஃப்டியை நாமதான் பார்த்துக்கனும்..

முந்தையப் பதிவை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க..
பெங்களூரும்.. இரவு வாழ்க்கையும்.

FALLEN - திரை விமர்சனம்

Fallen - 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்..

எட்கர் ரீஸ்னு ஒருத்தன் மர்மமான முறையில தொடர்கொலைகளை செய்ததுக்காக ஜான் ஹோப்ஸ் அவரைக் கைது பண்றார்.. ரீஸுக்கு மரண தண்டனை கொடுக்கறதா முடிவு பண்றாங்க.. கடைசியா எட்கர் ரீஸைப் பார்க்கப்போற ஜான் ஹோப்ஸ்கிட்ட ரீஸ் ஏதோ புரியாத மொழியில ஏதேதோ பேசறார்.. அப்புறம் அவருக்கு மரண தண்டனை நிறைவேத்திடறாங்க..

எட்கர் ரீஸ் செத்தவுடனே அப்பாடா!! தொல்லை ஒளிஞ்சதுன்னு ஜான் ஹோப்ஸ் நினைச்சிட்டிருக்கார்.. ஆனா அதுக்கு சந்தர்ப்பமே கொடுக்காம வேற யாரோ ஒருத்தர் ரீஸ் மாதிரியே மர்மக் கொலைகளைப் பண்ண ஆரம்பிச்சடறாங்க.. திரும்பவும் அந்தக் கேஸைக் ஹேண்டில் பண்ற ஜான் ஹோப்ஸுக்கு பயங்கரமான அதிர்ச்சி..

உண்மையில மர்மக்கொலைகளை செய்றது Azazelங்கற "சாத்தான்" அப்படிங்கற உண்மையை ஜான் ஹோப்ஸ் கண்டுபிடிக்கறார்.. அந்த சாத்தான் ஜான் ஹோப்ஸ் கண்ணுக்கெதிரா தன்னோட சக்திகளை காட்டுது.. அந்த சாத்தான் ஏதாவது ஒரு மனித உடம்புக்குள்ள போய்ட்டாலும்.. வேற உடம்புக்குள்ள போகனும்னு நினைச்சா அவங்களைப் போய் தொட்டாலே அந்த உடம்புக்குள்ள போயிடற மாதிரி சக்திகளை வைச்சிருக்கு.. அதால விலங்குகளோட உடம்புக்குள்ளவும் போயிடவும் முடியும்..

10 ஆண்டுக்கு முன்னே இதே மாதிரியே ஒரு தொடர்கொலைகளைப் பத்தி விசாரணை செய்திட்டிருந்த ஒரு போலீஸ் ஆபீசர் தற்கொலை செய்திகிட்டதை ஜான் தெரிஞ்சிக்கறார்.. செத்துப்போன அந்த போலீஸ்காரர் வீட்டுக்குப் போய் ஆராயறப்போ அவர் அந்த சாத்தான் பத்தி நிறைய விசயங்களை ரிசர்ச் பண்ணிக் கண்டுபிடிச்சி வைச்சிருந்திருக்கறதை ஜான் தெரிஞ்சிக்கறார்.. அவரோட குறிப்புகளை வைச்சி ஜானும் சாத்தானைப் பற்றி நிறைய விசயங்களைத் தெரிஞ்சிக்கறார்.. அதோட அவருக்கு ஒரு மகள் இருக்கறதையும் தெரிஞ்சிக்கிட்டு அவரைத் தேடிப்போறார் ஜான்..

ஜானுக்கு அந்தப் பொண்ணு எந்த ஹெல்ப்பும் பண்ணமாட்டேன்னு சொல்லிடுது.. அதோட நீயும் உன்னோட குடும்பமும் நல்லாயிருக்கனும்னா இந்தக்கேசை இதோட விட்டுட்டு வேற வேலையைப் பாருன்னு சொல்றாங்க அந்த பொண்ணு..

ஜான் ரொம்பக் குழப்பத்தோட வீட்டுக்குப் போறப்போ திடீர்னு ஒருத்தர் துப்பாக்கியை வைச்சிக்கிட்டு ஜானைக் கொலை பண்ண முயற்சிக்கறார்.. ஆனா அவருக்குள்ள சாத்தான் இருக்கறது ஜானுக்கு நல்லாவே தெரியும்.. வேற வழியில்லாம அவரை ஜான் கொன்னுடறார்.. அந்த இடத்துல இருந்த ஒரு பொண்ணு உடம்புக்குள்ள போயிட்டு அந்த சாத்தான் ஜானைப் பார்த்து சிரிக்குது.. ஜான் அநியாயமா ஒருத்தரைக் கொன்னுட்டார் இப்போ.. அதனால கொலைக்கேசுல மாட்டிக்கறார்..

தொடர்கொலைகளைப் பத்தி ஜான் ஹோப்ஸ் விசாரணை பண்ணீட்டு இருந்ததாலையும் நிறைய உண்மைகளைத் தெரிஞ்சுக்கிட்டதாலையும் ஜானைப் பழிவாங்க அவரோட சகோதரரையும் போட்டுத் தள்ளீடுது சாத்தான்.. இப்போ ஜானுக்கு என்ன செய்றதுன்னே தெரியல.. மனுசன்னா ஏதாவது செய்லாம்.. ஆனா ஜானோட கண்ணுக்கெதிராவே பலரோட உடம்புக்குள்ள போய் அந்த சாத்தான் பூந்துக்குது.. அதனால என்ன செய்றதுன்னு தெரியாம ஜான் குழம்பிடறார்..

சாத்தானோட திட்டம் என்னன்னா கொஞ்சம் கொஞ்சமா மனிதகுலத்தை அழிக்கறதுதான்.. இந்த விசயத்தை தெரிஞ்சிகிட்ட ஜான்.. அந்த சாத்தானை தடுத்து நிறுத்தினாரா.. முன்ன இந்தக் கேசை டீல் பண்ணீட்டு இருந்த போலீஸ்காரர் ஏன் தற்கொலை செய்து செத்துப்போனார்.. எல்லா விசயமும் அடுத்த வர்ற காட்சிகள்ல நமக்குத் தெரியும்..

படம் ஆரம்பிச்சப்போ ஏதோ குற்றவாளிகளைப் பிடிக்கற படம்னு நினைச்சிட்டுதான் பார்த்துட்டு இருந்தேன்.. ஆனால் கொஞ்ச காட்சிகள்லயே இது வேறமாதிரியான படம்னு தெரிஞ்சிடுச்சு..

ஜான் ஹோப்ஸை மிரட்டறதுக்கு அந்த சாத்தான் தெருவுல நடந்துபோற எல்லார் உடம்புலயும் புகுந்து காட்டுற காட்சி செம திரில்..

ஜானைப் பழிவாங்கறதுக்காக அவரோட சகோதரரை சாத்தான் போட்டுத் தள்றப்போ.. ஜானோட ரியாக்சன்ஸ் நல்லா இருக்கும்.. நமக்குப் பாவமேன்னு ஆயிடும்..

என்னையும் என் குடும்பத்தையும் விட்டுடுன்னு ஜான் கேக்கறப்போ.. நீ என்னைத் தொடர்ந்து வந்த!! அதனால நானும் உன்னைத் தொடர்ந்து வர்றேன்னு சாத்தான் சொல்ற சீன் நல்லா இருக்கும்..

திரைக்காட்சிகள் நகர்ந்த விதத்தில இருந்த கணம் கிளைமாக்ஸ்ல இல்லாதமாதிரி ஃபீல் ஆச்சு.. படத்தோட ஒருகாட்சி போலவே கிளைமாக்ஸும் அமைஞ்சிடுச்சு.. இன்னும் கொஞ்சம் திரில்லா ஏதாவது செய்திருக்கலாம்.. ஆனால் நல்ல விறுவிறுப்பான திரைக்கதை..

நல்ல திரில்லர் மூவி..

Thursday, October 28, 2010

Shutter Island - திரைவிமர்சனம்


இந்தப் படத்தோட ஹீரோ டைட்டானிக் பட ஹீரோ "லியனார்டோ டிகேப்ரியோ".. டைட்டானிக்குப் பிறகு நான் பார்த்த இவரோட படங்கள் எல்லாத்துலயுமே ரொம்ப சீரியஸான கேரக்டர்லதான் வர்றார்.. சட்டர் ஐலேண்ட் படத்துலயும் நடிப்புல பட்டையக் கிளப்புறார்..

சட்டர் ஜலேண்ட் அப்படிங்கறது கடலுக்கு நடுவுல இருக்கற தீவு.. மனநிலை பாதிக்கப்பட்டு கொலைகள் மற்றும் வேற ஏதாவது குற்றம் செய்தவங்களுக்கு அங்கே இருக்கற ஒரு பெரிய ஹாஸ்பிட்டல்ல சிகிச்சை அளிக்கறாங்க..

யூ.எஸ் மார்சல் எட்வர்ட் டெட்டி டேனியல்ஸ் (லியனார்டோ டிகேப்ரியோ) அந்த ஹாஸ்பிடல்ல இருந்து தப்பிச்ச ஒரு நோயாளியைப் (குற்றவாளி ரேச்சல் சொலான்டோ) பற்றி விசாரணை செய்யறதுக்காக அந்தத் தீவுல இருக்கற ஹாஸ்பிடலுக்கு வர்றார்.. அவருக்கு உதவியா சக் அப்படிங்கறவரும் வர்றார்.. தப்பிச்சுப்போன ரேச்சல் தன்னோட குழந்தைகளை தண்ணியில மூழ்கடிச்சுக் கொன்ன குற்றத்துக்காக அங்கே இருந்துட்டிருந்திருக்கார்..

ஹாஸ்பிடலோட தலைமை மருத்துவர்.. டாக்டர் ஜான் கேவ்லி அங்கே விசாரணை பண்றதுக்கு டெட்டிக்கு உதவறார்.. விசாரணையின் போது அங்கே நடக்கற ஒவ்வொரு சம்பவங்களுமே டெட்டிக்கு சந்தேகத்தை ஏற்படுத்துது.. ரேச்சல் தப்பிச்சுப் போகறதுக்கு அந்த ஹாஸ்பிடல்ல நிறையப்பேர் உதவி பண்ணியிருக்கனும்னு சந்தேகப்படறார்..

டெட்டியோட மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்ன நடந்த தீ விபத்துல இறந்து போயிட்டார்.. அன்னைக்கு நைட் டெட்டியோட மனைவி கனவுல வந்து ரேச்சல் இதே தீவுலதான் இருக்கா.. அதே போல தான் இறந்ததுக்கு காரணமான ஆண்ட்ரிவ் லேட்டீஸும் இதே தீவுலதான் இருக்கான்.. அவனைக் கண்டுபிடிச்சு நீங்க கொலை பண்ணனும்னு சொல்றார்.. அடுத்த நாள் அந்தத்தீவை விட்டு கிளம்பற ஐடியால இருந்த டெட்டி அங்கேயே இருந்து திரும்பவும் விசாரணைகளை ஆரம்பிச்சிடறார்.. அதேபோல தன்னோட மனைவியோட மரணத்துக்கு காரணமான ஆண்டிரிவ்வையும் அங்கே நோயாளிகளை அடைச்சி வைச்சிருக்கற கட்டிடத்துல தேடறார்..

அந்த தேடல்ல நமக்கும் டெட்டிக்கும் அதிர்ச்சி தரக்கூடிய சில விசயங்களை அங்கே இருக்கற ஒரு நோயாளிகிட்ட இருந்து டெட்டி தெரிஞ்சுக்கறார்.. இதுக்கிடையில காணமப்போன ரேச்சல் திரும்பவும் கிடைச்சிட்டதா தலைமை மருத்துவர் சொல்றார்..

அந்தத்தீவுல இருக்கற லைட்ஹவுஸ்ல போய் தன்னோட மனைவியைக் கொன்னவனைத் தேடலாம்னு அங்கே போறப்போ டெட்டியோட பார்ட்னர் சக் தொலைஞ்சு போயிடறார்.. அவரைத் தேடிட்டி இருக்கப்போ.. தப்பிச்சுப்போன உண்மையான ரேச்சல் ஒரு குகைல ஒளிஞ்சுருக்கறதை டெட்டி கண்டுபிடிக்கறார்.. அப்போ ரேச்சல்கிட்ட டெட்டி விசாரணை செய்றப்போ ஹாஸ்பிடல்ல நடக்கற மர்மங்களைப் பற்றி தெரிஞ்சுக்கறார்.. இந்தத்தீவை விட்டு உன்னால் வெளியே போகமுடியாது.. உன்னையும் மனநிலை சரியில்லாதவன்னு சொல்லி இங்கேயே தங்க வைச்சிடுவாங்க.. கண்டிப்பா அதுக்குண்டான சூழ்ச்சிகளை தலைமை மருத்துவர் செய்வார்ன்னு ரேச்சல் சொல்றதைக் கேட்டு டெட்டி ரொம்ப அதிர்ச்சியடையறார்..

தொலைஞ்சி போன அவரோட பார்ட்னரை டெட்டி கண்டுபிடிச்சாரா?.. அந்த ஹாஸ்பிடல்ல நடக்கற மர்மங்கள் என்ன?.. டெட்டி வர இருக்கற ஆபத்துகள் என்ன?.. தன்னோட மனைவியைக் கொன்ன ஆண்டிரிவ்வை டெட்டி கண்டுபிடிச்சாரா?.. அட உண்மையிலயே அங்கே என்னதாம்பா நடக்குதுன்னு அடுத்துவர்ற காட்சிகள்ல நாம தெரிஞ்சுக்குவோம்..

படம் ஆரம்பிச்ச முதல் சீன்ல இருந்தே செம வேகம்.. கடலுக்கு நடுவுல இருக்கற அந்தத்தீவைக் காட்டறப்பவே நம்ம ஹீரோ அங்கே நிறைய கஷ்டப்படுவார் போலவேன்னு நமக்குத் தோனும்.. டெட்டிக்குப் பார்ட்னரா வர்றவர் எப்போப்பார்த்தாலும் டெட்டி பேசறதவே கேட்டுட்டு நின்னுட்டிருப்பார்.. இவர் எதுக்குத் தேவையில்லாத கேரக்டர் நீங்க நினைச்சா அது தப்பு..

இப்ப வர்ற படங்கள்ல எல்லாம் யாரு ஹீரோ, வில்லன்னே தெரியமாட்டேங்குது.. ஆனா இதுல தலைமை மருத்துவரா வர்றவரைப் பார்த்தா அப்படியே நம்பியாரைப் பார்த்தாப்ல இருக்கு.. பளிச்சுன்னு முகம்.. ஆனா முகத்தைப் பார்த்தாலே பயங்கர வில்லத்தனம் தெரியுது.. ஆஹா!! இவர்தான் கண்டிப்பா வில்லன்னு மனசு முதல்லயே முடிவு பண்ணீடும்.. ஹீரோ விசாரணை நடத்தறப்போ அங்கே நடக்கற சம்பவங்களை நம்மாளேயே நம்ப முடியாது.. அப்புறம் எப்படி ஹீரோ நம்புவார்..

முதல்ல இருந்து கடைசி வரைக்குமே  மர்மமாவே இருக்கும்.. ஒரு சூழ்நிலையில ஹீரோவோட விசாரணைகளை எல்லாம் மறந்துட்டு.. இவர் எப்படி இந்தத்தீவுல இருந்து தப்பிப்பார்னு ஒரு மனநிலையை நமக்கு உருவாக்கிடுவாங்க.. நான் இதுவரை சொன்ன விசயங்கள்ல எந்த மர்மங்களையுமே அவிழ்க்கல.. நீங்களும் யார்கிட்டயும் கதை கேக்காம படம் பாருங்க.. செம திரில்லரான படம்..


Tuesday, October 26, 2010

பெங்களூரும்.. இரவு வாழ்க்கையும்..

பெங்களூர்ல IT சம்பந்தப்பட்ட அனைத்து துறைகள்லையும் அதிகமான வேலை வாய்ப்புகள் இருக்கறதால இந்தியாவுல அனைத்து மாநிலங்கள்ல இருந்தும் நிறையப் பேர் வேலைக்கு வர்றாங்க.. அப்படி வர்றவங்களுக்கு முதல்ல இருப்பிடம் ஒரு பெரிய பிரச்சினையா இருக்கு.. வரும்போதே கொஞ்சம் வெல்த்தியா வர்றவங்களும் சிட்டியில ஏற்கனவே நண்பர்கள் இருக்கறவங்களும் அவங்களோட அறைகளை ஷேர் பண்ணிக்கறாங்க.. இல்லைனா புதுசா ரூம் எடுத்து தங்கிக்கறாங்க..

சிட்டியில தங்கறதுல நாம எல்லாரும் சந்திக்கற முதல் பிரச்சினை என்னன்னா ரூம் அட்வான்ஸும் வாடகையும்.. நகர்பகுதிகள்ல 1 BHK ரூமூக்கு குறைஞ்சது ஐம்பதாயிரத்தில் இருந்து அட்வான்ஸ் கேப்பாங்க.. அதேபோல ரூம் வாடகையும் குறைஞ்சது ஐந்தாயிரமா இருக்கு.. இந்த அளவுக்கு ரூம் வாடகை குடுக்க முடியாதவங்க என்ன செய்றாங்க.. நகரை விட்டு வெளியே எலக்ட்ரானிக் சிட்டி, ராமமூர்த்தி நகர் மாதிரி ஒதுக்குப்புறமான இடங்களுக்கு குடியேறிடறாங்க.. அங்கேயும் குறைஞ்ச வாடகை எல்லாம் இல்ல.. ரெண்டு பேர் தங்கறமாதிரி ரூமுக்கு மூவாயிரத்து ஐநூரில் இருந்து நாலாயிரம் வரை வாடகை வாங்கிடறாங்க..

இந்த மாதிரி நகருக்கு வெளியே தங்கறவங்களுக்கு ஏற்பட முதல் பிரச்சினை என்னன்னா பாதுகாப்பின்மை.. இந்தமாதிரி ஏரியா எல்லாமே ஏதாவது நேசனல் ஹைவேயை ஒட்டி இருக்கு.. IT சம்பந்தமான வேலைகள் பார்க்கறவங்க பெரும்பாலும் ஜெனரல் ஷிஃப்ட் பார்க்கறதில்லை.. கண்ட நேரத்துக்கு ஷிஃப்ட் வைச்சி அவங்க உயிரை வாங்கிடுவாங்க.. அதுல நைட் நேரங்கள்ல வேலைக்கு போறவங்க தங்களோட கம்பெனி வண்டிகளுக்காக காத்திட்டிருக்கப்போ ஹைவேயில வழிப்பறி பண்றவங்களால தாக்கப்படறாங்க..

3 ஆண்டுகளுக்கு முன்ன என்னோட நண்பர் ஒருத்தர் ராமமூர்த்தி நகர்ல எங்களோட ஆபிஸ் வண்டிக்கு வெயிட் பண்றப்போ அவரோட பர்ஸ், ஜெர்கின் எல்லாத்தையும் புடிங்கிட்டு அடிச்சுப் போட்டு போயிட்டாங்க..
என்னோட இன்னொரு நண்பர் ஒருத்தர் இந்த மாதிரி ஒரு ஒதுக்குப்புறமான இடத்துல நின்னுட்டு இருந்தப்போ இதேமாதிரி வழிப்பறி நடந்திருக்கு.. இவருக்கு நடந்ததுன்னா இன்னும் மோசம்.. என் நண்பர்கிட்ட அப்போ பணம் இருந்திருக்கல.. ஆனா ஏடிஎம் கார்டு மட்டும் வச்சிருந்திருக்கார்.. அவரை ஒரு ஒதுக்குப்புறமான ஏடிஎம்முக்கு கூட்டிப்போயி அவர் பணத்தை எல்லாம் அவரையே எடுக்க வைச்சி அங்கேயே அவரை அடிச்சிப் போட்டுட்டாங்க.. ஆள் ஒருவாரம் ஆபிஸ் வரலை ஜுரத்துல.. அப்புறம்தான் விசயம் தெரிஞ்சது.. அந்த சம்பவங்களைக் கேட்டதுல இருந்தே நைட் வேலைக்கு போறதா இருந்தா ஒரு நூறு ரூபாய் மட்டுமே எப்பவுமே நான் எடுத்துக்கறது..

இந்த மாதிரி ஒருகதை போச்சுனா.. இன்னொரு முறையாகவும் வழிப்பறி பண்றாங்க.. நம்ம சென்னையில இருக்கற மாதிரி நடுராத்திரியா இருந்தாலும் இங்க நைட் சர்வீஸ் எதுவுமே இல்ல.. ஆட்டோ டிரைவர்ஸ் காலையில இருந்து நைட் வரைக்கும் மீட்டர் போட்டே வண்டி ஓட்ட மாட்டாங்க.. ஆனா நைட் சவாரி ஏதாவது வந்தா மட்டும் மீட்டரைப் போட்டுட்டு டபுள் மீட்டர் ஜார்ஜ் வாங்கிடுவாங்க.. ஒரு நடுராத்திரியில இப்படி நான் பஸ் இல்லாம மாட்டிக்கிட்டப்போ என்னோட இருப்பிடத்துக்கு வர்றதுக்கு மொத்தம் பதினெஞ்சே கிலோமிட்டருக்கு 300 ரூபாய் கொடுத்திருக்கேன்.. ஆக்சுவலா நான் இங்க சொல்ல வந்ததே வேற.. வேற ஏதோ பேசிட்டு இருக்கேன்..

இங்க சென்னை மாதிரி நைட் சர்வீஸ் எதுவுமே இல்ல.. அதனால நைட் நேரங்கள்ல ஆஃப் டியூட்டியில இருக்கற ஆபிஸ் வண்டிகள்ல லிஃப்ட் கேட்டு போற பழக்கத்தை பெங்களூர்ல நிறைய பேர் வச்சிருக்காங்க.. அந்தமாதிரி போறவங்களும் சிலநேரங்கள்ல பிரச்சனைகள்ல மாட்டிக்கறாங்க.. யாராவது ரொம்ப ரிச்சா லேப்டாப்பும் கையுமா தெரிஞ்சாங்கன்னா.. டிரைவர்களுக்கு தோதான இடமா இருந்தா அவங்களை ஏதாவது ஒரு ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு அழைச்சிட்டுப் போய் அடிச்சுப் போட்டுட்டு எல்லாத்தையும் புடிங்கிட்டு விட்டுடறாங்க.. இந்த மாதிரியும் என்னோட நண்பரோட நண்பர் அனுபவப்பட்டிருக்கார்.. ஆனா அவரை வழிப்பறி பண்ணின டிரைவரை போலீஸ் டிராக் பண்ணி புடிச்சிட்டாங்க.. ஓகே எல்லாம் திரும்பக் கிடைச்சிட்டதுன்னு நாம சந்தோசப்பட ஒன்னும் இல்ல.. அடிச்சுப்போடாம கொலை ஏதும் பண்ணினாங்கன்னா என்ன செய்றது.. எதுவும் உத்தரவாதம் இல்லை.. இங்கே அப்படி வண்டி ஓட்டற எல்லா டிரைவர்களையும் நான் குறை சொல்லல.. இந்த மாதிரி சம்பவங்களும் நடக்குதுன்னு சொல்ல வர்றேன்..

நகருக்கு ஒதுக்குபுறமான இடங்கள்ல வசிக்கறவங்களோட இன்னொரு பெரிய பிரச்சினை "நாய்".. என்னடா நாயிக்கு பயந்தவனா நீன்னு கேக்காதீங்க.. பெங்களூர்ல கல்லை விட்டு எறிஞ்சா எதாவது சாஃப்ட்வேர் கம்பெனி மேல போய் விழும், இல்லைனா ஏதாவது நாய் மேல போய் விழும்னு என் பிரண்ட் ஒருத்தன் நக்கலா சொல்லிக் கேட்டிருக்கேன்.. அவ்லோ நாய்ங்க திரியுதுங்க.. அதனால நகரைக் கிளீன் பண்றேன்னு எல்லாத்தையும் புடிச்சுட்டு வந்து சிட்டிக்கு வெளியே விட்டுடறாங்க.. அதெல்லாம் நைட் பண்ற அட்டூழியம் தாங்க முடியாது.. ஒரு வருசத்துக்கு முன்ன நகர்புறத்துக்கு வெளியே இருக்கற வீடுகள்ல தங்கியிருந்த ரெண்டு, மூனு குழந்தைகளை அடுத்தடுத்து பத்து, பதினைந்து நாய்கள் கடிச்சே கொன்னுட்டதா செய்திகள் வெளியாச்சு..

இரவு நேரங்கள்ல வெளியே எங்கேயாவது போகனும்னா எப்படியும் பத்துல இருந்து இருபது நாய்கள் நமக்கு பாடிகார்டா வருங்க.. கொஞ்சம் அதுங்களுக்கு சந்தேகம் வந்ததுன்னா ஆளுக்கு ஒரு பீஸ் எடுத்துட்டு போயிடுங்க.. அதனால நம்ம எந்திரன் ரோபோ மாதிரியே நடந்து வரவேண்டியிருக்கும்.. இந்தமாதிரி எனக்கும் ஒருமுறை ஒரு அனுபவம் ஏற்பட்டுச்சு..

(அதைப்பற்றி அடுத்த பதிவுல பார்ப்போம்)

Monday, October 25, 2010

FREQUENCY - திரை விமர்சனம்

Frequency (2000) - டைம் டிராவல் மூவி இது..

இந்தப்படம் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாசத்துல ஆரம்பிக்குது.. படத்தோட ஹீரோ ஜான் ஒரு போலீஷ்காரர்.. முப்பது வருசத்துக்கு முன்ன செத்துப்போன அவரோட அப்பாவைப் பத்தியே எப்பவும் நினைச்சிட்டிருக்கார்.. அப்படியே அவங்கப்பா ஃப்ரான்க்கைக் காமிக்கறாங்க..

ஃப்ரான்க் ஒரு தீயணைப்புப் படை வீரர்.. ரொம்ப நல்லவர்.. பொறுப்பா தன்னோட மனைவியையும் மகனையும் கவனிச்சுக்கறார்.. தன்னோட ஓய்வு நேரத்துல ஒரு ரேடியோவை வைச்சி எப்பவும் யார் கூடவோ பேசிட்டிருக்கார்..

நம்ம ஹீரோ ஜானுக்கு அவரோட அப்பாவோட ரேடியோ ஒன்னு கிடைக்குது.. அந்த ரேடியோவை பார்த்துட்டிருக்கப்போ யாரோ ஒருத்தர் அந்த ரேடியோல ஜானை தொடர்புகொள்றார்.. தங்களைப் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கற ரெண்டு பேருக்குமே ரொம்ப ஷாக்.. அதாவது ஜான் 30 வருசத்துக்கு முன்னால செத்துப்போன அவரோட அப்பாகூட பேசிட்டிருக்கார்.. ஆனா ஜானோட அப்பா ஃப்ரான்க்கால இந்த விசயத்தை நம்பமுடியல.. ரேடியோ டிஸ்கனைக்ட் ஆகறதுக்கு முன்னாடி ஜான் அவங்கப்பாகிட்ட நாளைக்கு நடக்கப்போற ஒரு பயர் ஆக்சிடென்ட்ல மாற்று வழியை யூஸ் பண்ணிங்கன்னா செத்துப்போயிடுவீங்கன்னு சொல்றார்.. ஜான் சொன்னமாதிரியே ஒரு பயர் ஆக்சிடென்ட் நடக்குது.. அதேபோல மாற்று வழியை யூஸ் பண்ணப்போறப்போ ஜான் சொன்னது ஞாபகம் வந்து வேற ஒருவழியா கட்டிடத்தை விட்டு வெளியே வந்திடறார் ஃப்ரான்க்.. அந்த நேரத்துல ஃப்ரான்க் இறந்து போகாததால இதுவரையும் இருந்த டைம் லைன் மாறிடுது.. அடுத்த நாள் ஆபிஸுக்கு போற ஜானுக்கு ஒரு அதிர்ச்சி காத்திட்டிருக்கு..

மூன்று பேரைக் கொலை பண்ணின ஒரு கேசை ஜான் ஹேண்டில் பண்ணீட்டு இருக்கார்.. அந்தக் கொலைகளைப் பண்ணினது யாருன்னு 30 வருசமா போலீஸால கண்டுபிடிக்க முடியல.. ஆபிஸுக்குப் போய் கேஸ்கட்டைப் பார்த்தா கொலைகள் பத்தா மாறியிருக்கு.. ஜானோட அப்பா ஃபயர் ஆக்சிடென்ட்ல இருந்து தப்பிச்சதுக்கு அடுத்த வாரம் அவங்கம்மா கொலை செய்யப்பட்டதா அந்த கேஸ்ல புதுசா ரெக்கார்ட் ஆயிருக்கு.. அதை தன்னோட அப்பாவுக்கு சொல்றார் ஜான்.. இந்த பத்து கொலைகளும் நடக்கக்கூடாது.. அப்போதான் அம்மாவையும் நாம காப்பாத்த முடியும்.. கொலை நடந்த நேரங்கள் என்கிட்ட பைல் ஆகியிருக்கு.. அந்த நேரங்கள்ல போய் கொலை நடக்கப்போறதைத் தடுங்கன்னு ஜான் அவரோட அப்பாகிட்ட சொல்றார்.. அதேபோல முதல் கொலை நடக்கவிடாம தடுத்துடறார் ஃப்ரான்க்..

ரெண்டாவதா கொலை நடக்கப்போற இடத்துக்கும் கரெக்டா ஃப்ரான்க் போயிடறார்.. அதனால கொலைகாரன் கடுப்பாகி ஃப்ரான்க்கைத் தாக்கிட்டு அவரோட டிரைவிங் லைசன்சை எடுத்துட்டு போயிடறான்.. அங்கே ரெண்டாவது கொலையைப் பண்ணீட்டு ஃப்ரான்க்கோட டிரைவிங் லைசன்ஸை பொணத்துக்கிட்ட போயிட்டு போயிடறான் கொலைகாரன்.. வீட்டுக்கு வர்ற ஃப்ரான்க் தன்னை கொலைகாரன் தாக்கீட்டு தன்னோட டிரைவிங் லைசன்ஸை எடுத்துப்போயிட்டதா ஜான்கிட்ட சொல்றார்.. அந்த டிரைவிங் லைசன்ஸை எடுக்கறப்போ கொலைகாரனோட கைரேகை ஃப்ரான்கோட பர்ஸ்ல பதிஞ்சிருக்கும்னு ஜானுக்குத் தோனுது.. அதனால ஃப்ரான்க்கோட பர்ஸை 30 வருசம் யாருக்கும் கிடைக்காதபடி ஒரு இடத்துல வைங்கன்னு ஜான் சொல்றார்.. அதேமாதிரியே ஃப்ரான்க் செய்றார்.. அதே நேரத்துல அதாவது 30 வருசம் கழிச்சு அந்த பர்ஸை கரெக்டா ஜான் எடுக்கறார்..

பர்ஸுல இருக்கற கைரேகையை வைச்சி ஒரு ரிட்டயர்டு போலீஷ் ஆபிஸர்தான் இவ்வளவு கொலைகளையும் செய்ததுன்னு ஜான் கண்டுபிடிக்கறார்.. அந்தக் கொலைகாரனோட பேரையும் தன்னோட அப்பாகிட்ட சொல்றார் ஜான்..

ஃப்ரான்க்தான் அந்தக் கொலையைப் பண்ணினதுனு போலீஷ் சந்தேகப்பட்டு அவரை அரெஸ்ட் பண்ணீடுது.. ஃப்ரான்க் தன்னை எப்படி நிரபாராதின்னு நிரூபிச்சார், ஜானோட அம்மா கொலை செய்யப்பட்டாங்களா.. ரேடியோ மூலமா 30 வருசத்துக்கு முன்னாடி வாழ்ந்திட்டு இருந்த தன்னோட அப்பாகிட்ட ஜான் திரும்பவும் பேசினாரான்னு அடுத்து வர்ற காட்சிகள்ல தெரியும்..

டைம் டிராவல் மூவின்ன உடனே ஏதாவது மெஷின் மூலமா டிராவல் பண்ணுவாங்கன்னு நினைச்சி பார்த்துட்டு இருந்தேன்.. ஆனால் ரேடியோ மூலமா 30 வருசத்துக்கும் முன்னாடியும் பின்னாடியும் இருக்கவங்க பேசிக்கிட்டப்போ "அடங்கொக்கா மக்கான்னு" ஆயிடுச்சு.. அப்ப இருந்தே படம் நல்ல விறுவிறுப்பா போக ஆரம்பிச்சிடும்..

ஃப்ரான்க்கோட பர்ஸை ஜான் முப்பது வருசம் கழிச்சு எடுக்கறப்போ எப்படியெல்லாம் யோசிக்கறானுங்கன்னு இருந்தது..

ஜானோட அப்பா மூலமா இறந்தகாலத்தை மாற்றியமைக்கறப்போ டைம்லைன் மாறி அதோட பாதிப்புகள் ஜானுக்கு வர்றதை விறுவிறுப்பா காட்டியிருப்பாங்க.. கொலைகாரனோட பாத்திரத்துக்குத்தான் சீரியஸ்னெஸ் பத்தல.. இன்னும் கொஞ்சம் நல்லா அமைச்சிருக்கலாம்.. கொஞ்சம் நல்ல டைம் டிராவல், திரில்லர் வகை மூவி இது..


Thursday, October 21, 2010

Prince of Persia: The Sands of Time - திரை விமர்சனம்

Prince of Persia: The Sands of Time

இந்த ஆண்டு வெளியான திரைப்படம் இது.. கதையோட ஹீரோ டஸ்டன் ஒரு அனாதை.. அவரோட திறமையைப் பார்த்து வியந்த பெர்சியா நாட்டோட அரசர்.. சின்ன வயசான டஸ்டனை தத்து எடுத்து வளர்க்கிறார்.. அரசருக்கு டஸ், கர்சிவ்ன்னு ரெண்டு பசங்களும் இருக்காங்க.. டஸ், கர்சிவ்வோட சித்தப்பா நிஜாம்.. டஸ்டனைத் தவிர இவங்க எல்லாம் அரச குடும்பத்தாருங்க..

பெர்சியாவோட எதிரிகளுக்கு புனித நகரமான "அலமட்" ஆயூதங்கள் விற்பனை செய்றதா தெரிய வருது.. நிஜாமுக்கு இது தெரிய வந்து அந்த நகரம் மேல படை எடுக்க வைக்கறாரு.. டஸ்டனோட திறமையால போர்ல ஜெயிச்சி அந்த நகரத்தோட அரசி டமினாவை சிறைபிடிக்கறாங்க பெர்சியா குரூப்.. அந்த சண்டையில ஒரு எதிரியைக் கொல்றப்போ ஒரு வித்தியாசமான குத்துவாள் டஸ்டனுக்கு கிடைக்குது..

அந்த வெற்றியைக் கொண்டாடும் போது.. அரசருக்கு ஒரு சிறப்பு ஆடையை பரிசாக கொடுக்க சொல்லி டஸ்டன்கிட்ட இளவரசர் டஸ் ஒரு ஆடையைக் கொடுக்கறார்.. ஏதுமறியாத டஸ்டன் அதேமாதிரியே செய்ய.. விசம் கலந்த அந்த ஆடையை உடுத்தியதால அரசர் இறந்திடறார்.. டஸ்டன்தான் அரசரைக் கொன்னதுன்னு எல்லாரும் அவரைத் துறத்த டமினா.. டஸ்டனைத் தப்பிக்க வைக்கறாங்க.. ஆனால் அவங்க தப்பிக்க வைச்சதே டஸ்டன்கிட்ட இருந்து அந்த குத்துவாளைப் அபகரிக்கற நோக்கத்துலதான்..

ஒரு இடத்துல டமினா டஸ்டனைக் கொல்லப் பார்க்கறப்போ அந்த குத்துவாள் இறந்துகாலத்துக்கு போற சக்தியுடையதுன்னு டஸ்டனுக்குத் தெரிய வருது.. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து அரசரோட இறுதி சடங்குல யாருக்கும் தெரியாம கலந்துக்கறாங்க.. அப்போ நடக்கற நிகழ்ச்சிகள் மூலமா அரசர் சாகக் காரணம் டஸ் இல்ல அவரோட சித்தப்பா நிஜாம்தான்னு தெரிய வருது.. அது ஏன்னா.. ஒரு பிளாஷ் பேக்..

சின்ன வயசுல நிஜாமும் அரசரும் வேட்டைக்குப் போயிருக்கப்போ ஒரு சிங்கத்துகிட்ட இருந்து அரசரை நிஜாம் காப்பாத்தியிருப்பாரு.. அந்தமாதிரி நடக்காம இருந்தா நிஜாம்தான் மன்னர் ஆயிருப்பாரு.. அந்த இறந்தகாலத்தை மாற்றியமைக்கத்தான் நிஜாம் புனிதநகரத்து மேல போர் தொடுக்க வைச்சிருக்காருன்னு புரிஞ்சுக்கறார் டஸ்டன்.. அதுக்கப்புறம் அரசரைக் கொன்னது நிஜாம்ன்னும் தான் நிரபாராதின்னும் நிரூபிக்க டஸ்டன் நிறைய போராடுறார்..

நிஜாமுக்கு இறந்தகாலத்துக்குப் போறதுக்கு டஸ்டன் கையில இருக்கற குத்துவாளும்.. அந்தக் குத்துவாளைப் பயன்படுத்தி இறந்தகாலத்துக்கு அழைச்சிட்டு போற சாண்ட்கிளாசும் தேவை.. அந்த சாண்ட்கிளாஸ் இரகசியமா பாதுகாக்கப்பட்டிருக்கு.. ஒருவேளை சாண்ட்கிளாஸ் உடைக்கப்பட்டா உலகம் அழிஞ்சிடும்னு டமினா சொல்றாங்க..

இந்தப் போராட்டங்கள்ல டஸ்டன் கையில இருக்கற குத்துவாள் நிஜாம் கைக்குப் போயிடுது.. சாண்ட் கிளாஸ் இருக்கற இடமும் தெரிஞ்டுது.. அவரைத் தடுக்கற முயற்சியில இளவரசி டமினா தன்னோட உயிரை தியாகம் பண்ணிடறாங்க.. டஸ்டனும் நிஜாமைத் தடுத்து அவரோட திட்டத்தை முறியடிச்சிடறார்.. அந்த சண்டையில சாண்ட் கிளாஸை நிஜாம் குத்தினதுல டஸ்டன் திரும்பவும் புனித நகரத்தை தோற்கடிச்சப்போ அந்தக் குத்துவாள் கிடைச்ச நேரத்துக்கு திரும்பவும் போயிடறார்.. டஸ்டனுக்கு இனி நடக்கப்போறது தெரியும்.. அதைத் தடுக்கறதுக்காக வெற்றிக் களிப்பில இருக்கற வீரர்கள் நடுவுல போய் நிஜாம் பத்தி சொல்றார்.. இதைப் பார்த்துக்கிட்டு இருக்கற டஸ் இந்த விசயம் உண்மையான்னு விசாரிப்போம்னு சொல்றார்.. விசாரணை நடந்தா கண்டிப்பா மாட்டிப்போனு தெரிஞ்சுக்கற நிஜாம்.. டஸ்டனைக் கொல்ல முயற்சிக்கறார்.. அந்த சண்டையில நிஜாமை இளவரசர் டஸ் கொன்னுடறார்..

அப்புறம் டமினாகிட்ட தப்பு நடந்துடுச்சு மன்னிச்சுக்கங்கன்னு மன்னிப்பு கேக்கறாங்க பெர்சியா குரூப்.. அதுக்கு பரிகாரமா டஸ்டனை கல்யாணம் பண்ணிக்கனும்னு டமினாகிட்ட வேண்டுகோள் வைக்கறாங்க.. குத்துவாளை டமினாகிட்ட திருப்பிக் கொடுக்கறார் டஸ்டன்.. படம் முடிஞ்சது..

இந்தப் படத்துமேல முதல்ல எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல.. ஆனா படம் ஆரம்பிக்கற விதமே நல்லா இருந்தது..

சின்ன வயசு டஸ்டன் மார்கெட்ல பண்ற சாகசம் நல்லா இருக்கும்.. அப்புறம் புனித நகரத்து மேல போர் தொடுக்கறப்போ டஸ்டன் செய்ற சாகசங்கள் அற்புதம்.. முதல்ல ஹீரோ இந்த கெட்டப்புக்கு ஒத்து வரலையேன்னு தோனினாலும் படம் ஓட ஓட அவரோட ஸ்டண்டுல நாம எல்லாருக்கும் அவரை புடிச்சுப் போயிடும்..

இளவரசி டமினாவும் அவரோட திமிரான பாத்திரத்துல நல்லாவே நடிச்சிருக்காங்க.. படம் முழுக்க டஸ்டனோட ஸ்டண்டுகளாத்தான் இருக்கும்.. எப்படியும் டஸ்டன் நிரபாரதிங்கறதோடதான் படம் முடியும்னு நமக்கு தெரிஞ்சாலும்.. திரைக்கதையை விறுவிறுப்பா அமைச்சிருக்காங்க..

படம் ஆரம்பிச்சு முடியற வரைக்கும் நேரம் போறதே தெரியாது..


Wednesday, October 20, 2010

புதிருக்கு பதில் சொல்லுங்க?

வணக்கம் நண்பர்களே..

இந்தப் பதிவுல 3 கேள்விகள் கேட்டிருக்கேன்.. உங்களோட விடையை பின்னூட்டமா போடுங்க.. ஆர்வம் குறையாம இருக்கனும்ங்கறதுக்காக உங்களோட பதில்களை கடைசியா வெளியிடறேன்..

1. ஒரு கூடையில 6 முட்டைகள் இருக்கு.. 6 பேர் 6 முட்டைகளை எடுத்துக்கறாங்க.. ஆனால் ஒரு முட்டை மட்டும் கூடையிலயே இருக்கு அது எப்படி?







2. ஒரு கொலைகாரன் இருக்கற இடம் தெரிஞ்சு போலீஸ் அவனைப் பிடிக்கறதுக்காக ஒரு வீட்டுக்குப் போறாங்க.. அந்தக் கொலைகாரன் எப்படி இருப்பான்னு போலீஸுக்குத் தெரியாது.. ஆனால் அவன் பேர் ஜான் அப்படிங்கறது மட்டும் தெரியும்.. அந்த வீட்ல 5 பேர் சேர்ந்து சீட்டு விளையாட்டிட்டு இருக்காங்க.. வீட்டுக்குள்ள போன போலீஸ் அந்தக் கூட்டத்துல யார் பேரு ஜான்னு கேக்காம கொலைகாரனை சரியா அரெஸ்ட் பண்ணீடறாங்க.. அது எப்படி?



3. ஆறு கிளாஸ் வரிசையா அடுக்கி வைக்கப்பட்டிருக்கு.. அதுல வரிசையா 3 கிளாஸ்ல ஆரஞ்சு ஜூஸ் இருக்கு.. அடுத்த 3 கிளாஸ் காலியா இருக்கு.. அதுல ஒரே ஒரு கிளாஸை மாற்றி வைக்கறது மூலமா ஆரஞ்சு கிளாஸையும், காலி கிளாஸையும் ஒன்ன விட்டு ஒன்னு வைக்க முடியுமா?




Tuesday, October 19, 2010

MY LITTLE BRIDE - திரை விமர்சனம்

My Little Bride (2004)

இது ஒரு கொரியன் மூவி.. படத்தோட ஹீரோயின் போயனுக்கு 16 வயசுதான் ஆகுது.. ஸ்கூல் படிச்சுட்டு.. அவர் ஸ்கூல்ல சீனியர் பையன் ஒருத்தனை சைட் அடிச்சிட்டு ஜாலியா திரிஞ்சிட்டு இருக்காங்க.. அவரோட தாத்தாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுது.. அதை சாதகமா பயன்படுத்திட்டு ஹீரோயினை.. ஹீரோ சங்மினுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் இதுதான் என் கடைசி ஆசைன்னு தாத்தா சொல்லிடறார்.. வேற வழியில்லாம கல்யாணம் நடக்குது.. ஆனா நம்ம ஹீரோயினுக்கு கல்யாணத்துல துளியும் இஷ்டமில்ல..

கல்யாணம் முடிஞ்சதும் ரெண்டு பேரையும் ஒரு டிரிப்புக்கு அனுப்பி வைக்கறாங்க வீட்ல இருக்கறவங்க.. ஏர்போர்ட்ல ஃபிளைட் ஏறாம ஹீரோவை ஏமாத்திட்டு போயன் ஓடிவந்திடறார்.. ஆனா வீட்டுக்கும் போகாம அவரோட ஸ்கூல் சீனியர் பையனோட சுத்தறார்.. சீனியர் பையனுக்கும் போயனை பிடிச்சுப் போய் புரொபோஸ் பண்றார்.. அந்தப் பையன் மேல போயன்க்கும் ஆசை இருக்கறதால அவரும் ஒத்துக்கறார்..

போயனுக்கு கல்யாணமாயிட்டாலும் ஸ்கூல்ல யாருக்கும் அந்த விசயம் தெரியாது.. ஒருநாள் அவரோட ஸ்கூலுக்கே நம்ம ஹீரோ டீச்சரா வந்திடறார்.. அங்கே அவரோட வேலை பார்க்கற லேடி டீச்சர் ஹீரோ மேல ஆசைப்படறாங்க.. ஆனால் ஒருசமயத்துல போயனுக்கும் சங்மினுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு அந்த டீச்சருக்கு தெரிஞ்சு போயிடுது.. அதனால போயனை பழிவாங்கறதுக்காக.. நடக்கப் போற ஸ்கூல் பெஸ்டிவலுக்கு தனி ஆளா ஸ்டேஜ்ல டிராயிங் வரைஞ்சு ரெடி பண்ண சொல்லி போயனுக்கு அந்த டீச்சர் ஆர்டர் போட்டுடறாங்க.. அது கண்டிப்பா போயனால முடியாது.. அதனால ஹீரோ போயனுக்கே தெரியாம அந்த டிராயிங்கை வரைஞ்சிடறார்..

சின்ன வயசுல இருந்தே ஹீரோ சங்மினுக்கு போயன் மேல ரொம்ப லவ்வு.. அதை போயன்தான் எப்பவும் புரிஞ்சுக்கவே இல்ல.. 16 வயசுல விளையாட்டுத்தனமா இருக்கற போயன் எப்படி ஹீரோவோட லவ்வைப் புரிஞ்சுக்கறாங்கன்னு.. அடுத்து வர்ற காட்சிகள் நகரும்..

ஹீரோயினா நடிச்சிருக்கற சின்ன பொண்ணு ரொம்ப நல்லாவே நடிச்சிருக்கு..

அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனவுடனே தனியா வீடு எடுத்து தங்க வைச்சிடுவாங்க.. அப்போ போயனை.. சங்மின் கலாட்டா பண்ற காட்சிகள் ரசிக்கற விதமா இருக்கும்..

கிளாஸ் ரூம்ல ஹீரோவுக்கு இருமல் வர்றப்போ பாக்கெட்ல இருந்து கர்ஷீப்பை எடுப்பார்.. ஆனா அது கர்ஷீப் கிடையாது.. ரொம்ப நகைச்சுவையான காட்சி.. அப்புறம் அது என்னன்னு நீங்க பார்த்து தெரிஞ்சுக்கங்க..

நல்ல நகைச்சுவைத் திரைப்படம்.. படம் பார்க்கும்போது நமக்கும் ஒரு ஜாலியான மூடு கிரியேட் ஆயிடும்..


Friday, October 15, 2010

வீட்ல வேலையா! - எச்சரிக்கை

நம்ம வீடுகள்ல வீட்டுக்கு ஒருத்தராவது கம்ப்யூட்டர் சம்பந்தமான கோர்ஸ் எடுத்து படிக்க ஆரம்பிச்சிட்டோம்..

ஆரம்பகாலங்கள்ல கம்ப்யூட்டரை யூஸ் பண்ணனும்னா ஏதாவது கம்ப்யூட்டர் சென்டர்லதான் ஜாயின் பண்ணனும்ங்கற நிலைமை மாறி.. டிவி மாதிரியே இப்போ வீட்டுக்கு ஒரு கம்யூட்டர்னு வந்துடுச்சு.. இனி அடுத்த ஆட்சியில வீட்டுக்கு ஒரு கம்யூட்டர் கொடுக்கப்படும்னு தேர்தல் வாக்குறுதி வெளிவந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு ஒன்னுமில்லைன்னு நினைக்கிறேன்..

வீடுகள்ல கேபிள் கனைக்சன் இருக்கறமாதிரியே.. கொஞ்சம் கொஞ்சமா நெட்கனெக்சனும் கொடுக்க ஆரம்பிச்சுட்டோம்.. எப்படியும் ஒன்னு ரெண்டு வருசங்கள்ல நெட்கனெக்சன் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிடலாம்.. நெட்கனைக்சன் வந்துடுச்சா.. அப்புறம் என்ன.. உலக விசயங்களை தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுடுவோம்.. கொஞ்ச நாள்ல இந்த நெட்கனைக்சனை வைச்சி ஏதாவது உருப்படியா செய்யமுடியுமான்னு யோசிக்க ஆரம்பிப்போம்.. இந்த மாதிரி வீடுகள்ல இருந்து நெட் யூஸ் பண்றவங்களை ஈர்த்து ஏமாத்தற விதமா நிறைய விசயங்கள் இருக்கு.. அதுல நாமே போய் வலையில விழற கதையா நம்ம மைண்டல தோன்ற முதல் விசயம் "ஹோம் ஜாப்".. அடுத்து என்ன? உடனே கூகுளை ஓப்பன் பண்ணி ஹோம் ஜாப்ஸ் தர்ற சைட்களை ப்ரெளஸ் பண்ண ஆரம்பிப்போம்..

அந்த மாதிரி சைட்கள்ல எண்ண பண்ணியிருப்பாங்க.. வீட்ல இருந்தே மாதம் 35000 சம்பாதிக்கணுமா.. தினமும் 2000 முதல் 5000 சம்பாதிக்கனுமா.. உடனே சந்தாதாரர் ஆகுங்க.. உங்களுக்கு நாங்க பிராஜெக்ட் தரனும்னா ஒரு குறிப்பிட்ட தொகை டெப்பாசிட்டா கட்டுங்க அப்படின்னு விளம்பரம் தந்துருப்பாங்க.. நாமளும் அதை நம்பி டெப்பாசிட் கட்டிட்டோம்னா அடுத்து நிலைமை என்னன்னு நமக்கு நல்லாவே தெரியும்..

சிலபேர் ரொம்ப புத்திசாலித்தனமா.. இந்த மாதிரி டெப்பாசிட் கேக்கற தளங்களை தவிர்த்திடுவாங்க.. அந்த மாதிரி யோசிக்கறங்களுக்காகவும் நிறைய தளங்களை ஓப்பன் பண்ணி வைச்சிருக்காங்க.. அவங்களோட விளம்பரம் எப்படி இருக்கும்னா.. நீங்க டெப்பாசிட் எல்லாம் தரவேண்டாம்.. உங்களுக்கு தினமும் இவ்வளவு ஃபாம்களை நெட்ல ஃபில் பண்ணித்தரனும்.. அந்த மாதிரி ஃபில் பண்ணப் பண்ண உங்களோட பணம் அக்கவுண்ட்ல சேர்ந்துட்டே இருக்கும்.. கரெக்டா 45 நாட்கள்ல உங்களுக்கு பணத்தை அனுப்புவோம்.. அப்படின்னு இருக்கும்.. அதையும் நம்பி அந்த மாதிரியும் செய்றவங்களுக்கு பணம் வருமான்னு அந்தமாதிரி வேலை செய்தவங்களைக் கேட்டால் தெரியும்..

ஹோம் ஜாப்ஸ் பண்ணனும்னு நினைக்கறவங்க.. நெட்கனெக்சன் யூஸ் பண்ணி வேற என்ன வழிகள்ல எல்லாம் பணம் சம்பாதிக்கனும்னு நினைக்கறாங்களோ.. அவ்வளவு வழிகள்லயும் அவங்களை ஏமாத்தறதுக்கு நிறைய தளங்கள் இருக்கு.. இந்தமாதிரி விசயங்கள்ல இறங்கினவங்க எவ்வளவுதான் உஷாரா இருந்தாலும்.. கண்டிப்பா ஏமாந்துதான் போறாங்க..

நெட் கனைக்சன் மூலமா ஹோம் ஜாப் தர்ரேனு ஒரு கூட்டம் அழையுதுன்னா.. இப்போ பாப்புலரா ஓடிட்டு இருக்கற இன்னொரு விசயம்.. கம்பெனிகள்ல பண்ற வேலைகளை ஃப்ரீலேன்சரா வீட்லயே இருந்து பண்றது..

இந்த மாதிரி வேலைகளைத் தர்றதுக்கும் நிறைய கம்பெனிகள் பெரும்பாலான நகரங்கள்ல முழைச்சிடுச்சு.. அந்தமாதிரி கம்பெனிகள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கற விசயம் டேட்டா என்ட்ரி, டேட்டா கன்வெர்சன் இந்த மாதிரி பிராஜெக்டுகளைத்தான்.. அந்தக் கம்பெனிகளை அப்ரோச் பண்றவங்ககிட்ட அவங்களோட டெர்ம்ஸ்&கண்டிசன்ல நிறைய விசயங்களை எழுதியிருப்பாங்க.. அதுல சில விசயங்கள் என்னன்னா?

1. ஒரு பக்கத்திற்கு 6 எழுத்துப் பிழைகளுக்கு மேல இருக்கக்கூடாது (ஒரு தோராயமா சொல்லியிருக்கேன்).
2. 6 பிழைகள் இருக்கும் பட்சத்துல உங்களுடைய வேலை நிராகரிக்கப்படும். (அதனால திரும்பவும் அந்த வேலையை செய்யனும்.. ஆனால் திரும்பவும் சப்மிட் பண்றப்போ ரெண்டாவது தடவையா தரத்தை செக் பண்றதுக்காக ஒரு குறிப்பிட்ட அமெளண்ட்டை பிடிச்சிடுவாங்க.. அதுவும் ரெண்டாவது முறை உங்க உழைப்பை ஏத்துக்கறமாதிரி இருந்தாத்தான்)
3. குறிப்பிட்ட தேதிக்குள்ள சப்மிட் பண்ணனும்.. தேதிக்கு ஒரு நாள் மிஸ் ஆனாலும் ஏத்துக்கப்படாது.
4. மொத்தமா தரம் 95% இருக்கனும்.
5. இரண்டு முறை தரத்தை இழக்கும் பட்சத்துல அக்ரிமெண்ட் கேன்சல் ஆகும்.


இப்படி நிறைய எழுதியிருப்பாங்க.. ஆனால் நமக்கு சம்பாதிக்கனும்.. முன்னேறனும்.. அப்படிங்கற வெறிமட்டுமே இருக்கும்.. அந்த அக்ரிமெண்ட்ல இருக்கற ஓட்டைகள் எல்லாம் தெரியாது.. அவங்க கேக்கற டெப்பாசிட்டைக் கட்டிட்டு அக்ரிமெண்ட் போட்டுடுவோம்.. நீங்க கண்ணே.. மணியேன்னு பார்த்து பார்த்து டைப் பண்ணினாலும் உங்க பைல்ஸ் ரிஜெக்ட் ஆகும்.. அப்படி ஏதும் நடக்கலைன்னா.. உங்க பணத்தை டெலிவர் பண்ற டைமுக்கு ஒரு லெட்டர் அனுப்புவாங்க.. அதுல இப்போ பிராஜெக்ட் கொஞ்ச நாளைக்கு வராது.. வர்றப்போ உங்களுக்கு இன்ஃபாம் பண்றோம்.. அதேபோல பணமும் அப்பத்தான் கிடைக்கும்ங்கற மாதிரி எதையாவது எழுதியிருப்பாங்க.. பட்டை நாமம்.. உங்க உழைப்புகளையும் முழுமையா உறிஞ்சிக்கிட்டு அதுக்கேத்த ஊதியத்தைக் கொடுக்க மாட்டாங்க.. ஆனால் சில அறிதான நேரங்கள்ல எல்லாமே கரெக்டா நடக்கும்.. அப்போ நமக்கு என்ன தோனும்.. இதே மாதிரி இன்னும் 4 சிஸ்டம் வாங்கிப்போட்டு நாலு பேரை வைச்சி வேலை வாங்கினா இன்னும் சம்பாதிக்கலாம்னு நினைப்போம்.. அப்படி விரிவு பண்றவங்களுக்கு பெரிய ஆப்புதான்..

இந்தமாதிரி வேலைகள் செய்றவங்க நிறைய பேரை அடிக்கடி நான் சந்திக்க நேர்ந்ததால.. அவங்களுக்கு கடைசியா என்ன நிலை ஆகும்னு நல்லாவே தெரியும்.. ஆனா என்ன சொன்னாலும் அப்போ அவங்களுக்கு இருக்கற மனதைரியம், சம்பாதிக்கனும்ங்கற வெறி.. அவங்களை யோசிக்க விடாது.. இந்தமாதிரி வேலை செய்றவங்க எல்லாத்தையும் நான் குறை சொல்லல.. ஆனா இந்த வேலைகள்ல நிறைய ரிஸ்க் இருக்கு.. ஏமாத்திடறதுக்கு நிறைய சான்சஸ் இருக்கு.. உங்களோட கிளையண்ட் நேரடியா உங்க பிராஜெக்டை ரன் பண்றவரா இருந்தா ஒரு பிரச்சினையும் இருக்காது.. இடையில ஒரு ஆள் இருந்து வாங்கித்தர்ற பிசினசா இருந்தா கண்டிப்பா கொஞ்சம் யோசிச்சு செயல்படலாம்னு நினைக்கறேன்..

Saturday, October 9, 2010

THE EYE - திரை விமர்சனம்

The Eye (2008)
ஜெசிகா ஆல்பா இந்தப் படத்தோட ஹீரோயின்.. படத்துல இவருக்குப் பேர் சிட்னி..

படத்தோட முதல் காட்சியிலயே ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கறதைக் காட்டறாங்க..

சிட்னிக்கு 5 வயசுல இருந்தே கண்பார்வையில்ல.. அவங்களுக்கு கண் ஆபரேசன் பண்ணி பார்வை வரவழைச்சிடறாங்க.. கண் பார்வை கிடைச்சதுல கண்ணு மட்டும் தெரியாம.. மத்தவங்களால பார்க்க முடியாத மத்த விசயங்களும் அவங்க கண்ணுக்குத் தெரியுது.. கண் கட்டு அவுத்து விட்ட முதல் நாள் இரவே சிட்னியோட பக்கத்து பெட்ல படுத்து இருந்த ஒரு பாட்டியை.. யாரோ கூட்டிப் போறமாதிரி காட்சியைப் பார்க்கறாங்க.. ஆனா அவங்களுக்கு இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா பார்வை வந்துட்டு இருக்கறதால என்ன நடந்ததுன்னு தெளிவா தெரியல.. அடுத்தநாள் நர்ஸ்கிட்ட பக்கத்து பெட்டு பாட்டியைப் பத்தி விசாரிச்சா.. நடுராத்திரியிலயே அந்தமா செத்துப்போச்சுன்னு சொல்றாங்க.. இல்லையே நான் அவங்க எழுந்து போறதைப் பார்த்தேனேன்னு சிட்னி குழம்பினாலும்.. என்ன நடந்ததுன்னு நமக்குப் புரிஞ்சுடுது..

இதுநாள் வரைக்கும் குரலை மட்டுமே கேட்டுட்டு இருந்த சிட்னிகிட்ட.. எல்லாரும் முகத்தைக் காட்டி அறிமுகமாயிக்கறாங்க.. சிட்னி முதன் முதலா தன்முகத்தைக் கண்ணாடியில பார்க்கறாங்க.. இப்போ அவங்களுக்கு பார்வை தெளிவாயிடுச்சு..

முன்னப் பார்த்த மாதிரி காட்சிகள் இப்போ அவங்களுக்கு தெளிவாவே தெரிய ஆரம்பிக்குது.. ஒரு முறை ரோட்ல போயிட்டு இருக்காங்க.. அப்போ ஒரு விபத்து நடந்து.. ஒரு பொண்ணு செத்துப் போயிடுது.. அந்தப் பொண்ணோட ஆவியை ஒரு கருப்பு உருவம் வந்து கூட்டிப் போறது சிட்னிக்குத் தெளிவா தெரியுது.. இந்த மாதிரி காட்சிகள் மட்டுமில்லாம.. சிட்னி இதுவரைக்கும் பார்க்காத இடங்களும்.. ஏதோ ஒரு இடத்துல தீ எரியற மாதிரி காட்சிகளும் அடிக்கடி வந்து அவங்களை பயமுறுத்துது..

ஒரு முறை சிட்னி தன்னோட போட்டோவைப் பார்த்துட்டு இது யாருன்னு கேக்கறாங்க.. என்ன லூசுமாதிரி உளர்ற.. நீதான் இதுன்னு அவரோட சகோதரி சொல்றதைக் கேட்டு பயங்கரமா அதிர்ச்சியாயிடறாங்க.. தன்னோட போட்டோவைப் எடுத்துட்டுப் போயி கண்ணாடி முன் நின்னு பார்க்கறாங்க.. அப்போ நடக்கற சீன்ல.. அவங்களை விட நாமதான் கொஞ்சம் பயந்துடுவோம்.. இப்படி இவங்களுக்கு நடக்கற சம்பவங்களைப் பார்த்து.. பேசாம குருடியாவே இருந்திருக்கலாம் போலன்னு நமக்குத் தோனும்..

இந்த புதிர்களுக்கு எல்லாம் விடை தெரிஞ்சுக்க.. தனக்குக் கண் கொடுத்த பெண்ணைப் பத்தி தெரிஞ்சுக்க.. அந்த பெண்ணோட ஊருக்கு சிட்னி  போறாங்க.. முதல் சீன்ல ஒரு பொண்ணு தூக்கு போட்டுக்குமே.. அந்தப் பொண்ணோட கண்ணைத்தான் சிட்னிக்கு வச்சிருக்காங்க.. அந்தப் பொண்ணு செத்துப் போனதுக்கு காரணத்தையும் சிட்னி தெரிஞ்சுக்கறாங்க.. செத்துப் போன பொண்ணு தன்கிட்ட எதையோ சொல்ல நினைக்குதுன்னு சிட்னிக்குப் புரிஞ்சுடுது.. அது என்ன விசயம்.. சிட்னியோட நிலைமை என்ன?.. அப்படிங்கறது மீதி படம்..

அமைதியான அழகு ஜெசிகா ஆல்பாவுக்கு.. எமனை நேர்ல பார்த்தா எப்படி பயம் வரும்னு ஜெசிகா ஆல்பா ரொம்ப அழகா காட்டியிருப்பாங்க.. சிட்னிக்கு பார்வை தெரிஞ்சவுடன் அவங்க பார்க்கற காட்சிகள்ல நம்மளையும் பயமுறுத்த ட்ரை பண்ணியிருக்காங்க..
 படம் ரொம்ப பயப்படற மாதிரியெல்லாம் இருக்காது.. நைட் நேரத்துலயும் பயப்படாம பார்க்கக்கூடிய ஹாரர் மூவி இது..


Wednesday, October 6, 2010

IT'S A WONDERFUL LIFE - திரை விமர்சனம்

"It's a Wonderful Life" - 1946 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இது.. ஏதேச்சையா இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.. டைட்டில் கார்டு போடும் போதே ரொம்ப பழைய படம் போல தெரியுதேன்னு கொஞ்சம் அலுப்பா இருந்தது.. ஆனா முதல் காட்சியில இருந்தே படத்தோட ஒன்றிப் போயிட்டேன்..

"ஜார்ஜ் பெய்லி" இவர்தான் படத்தோட ஹீரோ.. முதல்காட்சியிலயே ஜார்ஜை நல்லபடியா வைச்சிருக்க சொல்லி அவரோட நண்பர்களும், குடும்பத்தாரும் ரொம்ப டீப்பா பிராத்திக்கறாங்க.. அந்த பிராத்தனை சொர்க்கத்தை அடையுது.. அந்த பிராத்தனையைக் கேட்ட தலைமைத் தூதர் ஜோசப்.. தேவர்கள்ல இரண்டாவது நிலையில இருக்கற க்ளாரன்சைக் கூப்பிடறார் (சிறகுகள் இல்லாத தூதர்னா செகண்ட் க்ளாஷாம்).. ஜார்ஜ் பத்தின மேட்டரை சொல்லி.. ஜார்ஜ் இன்னைக்கு தற்கொலை செய்துக்கப் போறார்.. நீ போய் அவரைக் காப்பாத்தினா உனக்கு சிறகுகள் கிடைச்சு முதல் நிலைத் தூதராயிடலாம்னு சொல்றார்.. அதுக்கு முன்னாடி தன்னோட சக்தியை பயன்படுத்தி க்ளாரன்சுக்கு ஜார்ஜோட வாழ்க்கையைக் காட்டறார்.. அப்படியே நாமளும் பார்க்க ஆரம்பிக்கறோம்..

ஜார்ஜுக்கு அப்போ 12 வயசாயிருக்கு.. அவர் தன்னோட தம்பி, நண்பர்களோட சேர்ந்து பனியில சறுக்கி விளையாடிட்டு இருக்கார்.. அப்போ அவரோட தம்பி தவறுதலா பக்கத்துல இருக்கற குளத்தில விழ.. அவரைக் காப்பற்றப் போன ஜார்ஜுக்கு ஒரு காது கேக்காம போயிடுது.. அதுக்கப்பறம் அவர் வேலை செய்த மருந்துக்கடை முதலாளி.. கவனக்குறைவா விஷத்தைக் ஒரு பேசண்டுக்கு கொடுக்கறதைக் கவனிச்சு அதையும் தடுத்து நிறுத்தி.. வர இருந்த ஆபத்தை தடுத்திடறார்..

ஜார்ஜ் சின்னவயசுல இருந்தே ரொம்ப நல்லவரா.. எல்லாரும் நல்லாயிருக்கனும்னு நினைச்சு வாழ்ந்திட்டு இருக்கார்.. பெய்லி பில்டிங் அண்ட் லோன் அசோசியேசனை நிர்வகிச்சுகிட்டு இருந்த ஜார்ஜோட அப்பா.. திடீர்னு மாரடைப்புல இறந்திடறார்.. அதுக்கு ஜார்ஜ் தலைமை பொறுப்பு எடுத்துக்கலைன்னா.. பாட்டர் அப்படிங்கற இன்னொரு லீடிங் ஷேர்ஹோல்டர் அதோட தலைமைப் பொறுப்புக்கு வர்ற சூழ்நிலை ஆயிடுது.. பாட்டர் மக்களை ஏமாத்தி அவங்களோட நிலங்களை அபகரிக்கறவர்.. அதனால மக்களைக் காப்பத்தறதுக்காக ஜார்ஜ் தலைமைப் பொறுப்பை ஏத்துக்கறார்..

தன்னோட தம்பி படிப்பு முடிஞ்சு வந்தவுடனே.. ஜார்ஜ் நிர்வகிச்சுட்டு இருக்கற பெய்லி பில்டிங் அண்ட் லோன் அசோசியேசனை தம்பிகிட்ட ஒப்படைச்சுட்டு ஒரு எஞ்ஜினியர் ஆகணும்ங்கறது அவரோட கனவா இருக்கு.. ஆனால் தன்னோட தம்பி படிச்சு முடிச்சு வரும்போதே ஒரு பணக்காரப் பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு வர்றார்.. அந்த பெண்ணோட அப்பா தனக்கு ஒரு பெரிய பதவியுள்ள வேலையை ஏற்பாடு செய்து இருக்கறதாகவும் சொல்றார்.. அதனால எப்பவும் போல தன்னோட கனவுகளை சகிச்சுகிட்டு பழைய நிலையையே தொடறார் ஜார்ஜ்..

அப்புறம் ஜார்ஜ் தன்னோட காதலியை திருமணம் முடிச்சுக்கறார்.. அவர் ஹனிமூன் போற சமயத்துல.. அவரோட கம்பெனி திவாலாயிடுச்சுன்னு புரளியைக் கிளப்பி விடறார் பாட்டர்.. அதனால ஹனிமூன் போக வைச்சிருந்த பணத்தை வைச்சு ஜார்ஜ் நிலைமையை சமாளிக்கறார்..

கொஞ்சம் வருசம் கழிச்சு.. மக்களுக்கு பயனுள்ள வகையில ஜார்ஜ் பார்க்குன்னு ஒரு வீட்டுமனைத் திட்டத்தை ஆரம்பிக்கறார்.. அதனால பாட்டர்கிட்ட இனிமே மக்கள் ஏமாற வேண்டாங்கற நிலையை உருவாக்கறார்..

ஒருசமயம் ஜார்ஜோட கம்பெனி கணக்குகளை பார்த்துட்டு இருக்கற அவரோட மாமா.. 8000 டாலர் கம்பெனி பணத்தை பேங்குல தொலைச்சிடறார்.. அந்த பணம் பாட்டர் கையில கிடைச்சுடுது.. இவ்வளவு நாளும் நேர்மையா.. மக்களுக்கு உதவி பண்ணிட்டு இருந்த ஜார்ஜுக்கு இது ஒரு பெரிய இழப்பு.. பாட்டர்கிட்டயே போய் உதவி கேக்கறார்.. அதுக்கு பாட்டர் நீ மக்களை ஏமாத்தி பிராடு பண்ணியிருக்க.. இனி நீ ஜெயில்லதான் உன்னோட காலத்தைக் கழிக்கவேண்டியிருக்கும்னு அவரை மேலும் கஷ்டப்படுத்திடறார்..

இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில ஜார்ஜ் தற்கொலை செய்துக்கப் போறார்..

தேவதூதர் க்ளாரன்ஷ்.. ஜார்ஜோட முழுக்கதையையும் தெரிஞ்சுக்கிட்டு அவரைக் காப்பாத்தக் கிளம்பறார்.. ஜார்ஜோட தற்கொலை முயற்சியைத் தடுத்து நான் ஒரு தேவதூதர்.. நீ இப்படி எல்லாம் தற்கொலை செய்துக்கக் கூடாதுன்னு அட்வைஸ் பண்றார்.. ஆனால் அவரைத் தேவதூதர்னு ஒத்துக்க மறுக்கிறார் ஜார்ஜ்.. சரி ஜார்ஜ் நீ பிறக்கவே இல்லைனா எப்படியிருக்கும்னு உனக்கு காட்டறேன்னு சொல்லிட்டு ஊருக்குள்ள கூட்டிப்போறார் க்ளாரன்ஷ்..

ஜார்ஜுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. அவரோட ஊர் பேரே பாட்டர்வில்லின்னு இருக்கு.. சிட்டி முழுக்க இரவு விடுதிகளும்.. அடமானக்கடைகளும் நிறைஞ்சு கிடக்கு.. அவரோட பெய்லி பார்க் கட்டப்படாம அங்க சுடுகாடு இருக்கு.. அவரோட தம்பி குளத்தில விழுந்து இறந்து போனதால அவரோட கல்லறை அங்க இருக்கு.. தன்னோட சின்ன வயசு மருந்துக்கடை முதலாளி தவறுதலா விஷம் கொடுத்ததால பல வருசங்களா ஜெயில் தண்டனை அனுபவிச்சு இருந்திருக்கார்.. அவரோட நண்பரோட பாரை வேற ஒரு ஆள் நடத்திக்கிட்டு இருக்கார்.. அவரோட மனைவி கல்யாணம் செய்துக்காமலே இருக்கார்.. ஜார்ஜ் பிறந்திருக்கவே இல்லைனா இது எல்லாமே நடந்திருக்கும்.. தன்னோட முக்கியத்துவத்தை உணர்றார் ஜார்ஜ்.. அதனாலதான் தற்கொலை செய்துக்கப் போறதில்லைன்னு முடிவெடுத்துட்டு ரொம்ப சந்தோசமா தன்னோட வீட்டுக்குப் புறப்படறார்..

ஜார்ஜ் வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே அவரோட மாமா.. பண நிலைமைகளை சீர் செய்துடறார்.. ஊர் மக்களும் ஜார்ஜோட நிலைமையை தெரிஞ்சுக்கிட்டு அவருக்கு முடிஞ்ச பண உதவிகளை செய்றாங்க.. அந்த வருச கிறிஸ்துமஸை ரொம்ப சந்தோசமா கொண்டாடறாங்க ஜார்ஜ் பேமிலி..
கிறிஸ்துமஸுக்கு வந்த கிப்ட் ஒன்னுல..

"Dear George, 
Remember no man is a failure who has friends. 
Thanks for the wings, 
Love, 
Clarence."

இப்படி எழுதியிருக்கு.. ரொம்ப சந்தோசத்தோட படம் முடியுது..

பார்க்கற ஒவ்வொருத்தருக்கும் அபரிதமான தன்னபிக்கையை கொடுக்கற திரைப்படம் இது.. ஒரு நல்ல மனிதன் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் அழிஞ்சு போயிடறதில்லைங்கற கருத்தை ரொம்ப ஆழமா சொல்லியிருக்காங்க.. படத்தோட கடைசிக் காட்சியைப் பார்க்கற ஒவ்வொருத்தருக்கும் ஆனந்தக் கண்ணீர் வர்றது உறுதி..

படத்தோட ஹீரோயின் திகட்டாத அழகு..

1955 ஆம் ஆண்டு சிவாஜிகணேசன் நடிச்சு வெளிவந்த "முதல் தேதி" அப்படிங்கற திரைப்படமும் இதே தீம்தான்.. இந்த ரெண்டு படத்துக்கும் வித்தியாசம் நிறைய இல்ல..


Monday, October 4, 2010

BACK TO THE FUTURE - திரைவிமர்சனம்

மனிதர்கள் ஒவ்வொருத்தருக்கும் நிகழ்காலத்தைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னு ஆசை கண்டிப்பா இருக்கும்.. அந்த எண்ணங்களின் வெளிப்பாடுகளால.. வருங்காலத்தை அறிஞ்சுக்கறதுக்கு.. ஜோசியம் அது இதுன்னு நிறைய விசயங்களை செய்றோம்..

திரைப்படங்களை எடுத்துக்கிட்டோம்னா ஒருபடி மேல போயி.. நாம இருக்கற காலத்தில் இருந்து வேறொரு காலத்துக்கு டைம் ட்ராவல் பண்றோம்னு.. டைம் மெஷின் பத்தி நிறைய படங்கள் எடுத்திருக்காங்க.. நானும் ரீசண்டா டைம் ட்ராவல் பண்ற ஒரு படத்தொடரைப் பார்த்தேன்.. "Back to the Future".. 1985 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாயிருக்கு.. அதுக்கப்பறம் இந்தப் படத்தோட தொடர்ச்சியா 1989, 1990 ஆம் ஆண்டுகள்ல இரண்டு படங்கள் வந்தது..

Back to the Future (1985)


படத்தோட கதை 1985 ஆம் வருசத்துல இருந்து ஆரம்பிக்குது.. இந்த கதையோட ஹீரோ மார்டி மெக்ஃபிளேயும், அவரோட சைண்டிஸ்ட் நண்பர் எம்மெட் "டாக்" பிரவுனும் சேர்ந்து.. எம்மெட் புதுசா கண்டுபிடிச்சிருக்கற டைம் மெஷினை சோதிக்கறாங்க.. அப்போ திடீர்னு வந்த தீவிரவாதிகள் எம்மெட்டை சுட்டுடறாங்க.. அந்த தீவிரவாதிகள்கிட்ட இருந்து தப்பிக்கறதுக்காக மார்டி அந்த டைம் மெஷினை யூஸ் பண்ணி தப்பிக்கறார்.. அது அப்படியே அவரை 1955 ஆம் ஆண்டுக்கு கூட்டிட்டு போயிடுது.. அந்த டைம் மெஷினை ரன் பண்றதுக்கு 1.21 கிகாவாட்ஸ் பவர் தேவைப்படறதால அவரால பியூச்சருக்கு திரும்பமுடியாம அங்கயே ஸ்ட்ரக் ஆயிடறாரு.. அங்கே அவருக்கு நிறைய அதிர்ச்சிகள் காத்துட்டிருக்கு..

1985 ஆம் ஆண்டுக்கு திரும்பப் போகணும்னா அதுக்கு ஒரே வழி சயண்டிஸ்ட் எம்மெட்டைக் கண்டுபிடிக்கறதுதான்.. எம்மெட்டைக் கண்டுபிடிச்சு தன்னோட நிலைமையை மார்டி விளக்கறார்..

அடுத்ததா 1955 ஆம் ஆண்டுல காலேஜ் படிச்சுட்டு இருக்கிற தன்னோட அப்பாவையும் அம்மாவையும் மார்டி சந்திக்கறார்.. மார்டியோட அம்மாவுக்கு தன்னோட வருங்கால கணவர் மேல காதல் வர்றதுக்குப் பதிலா.. தன்னோட வருங்கால மகனைப் பார்த்தே ஆசைப்படறார்.. இப்படி ஆசைப்படற தன்னோட அம்மாவுக்கு.. அப்பா மேல காதல் வர வைக்க மார்டி நிறைய கஷ்டப்படறார்..

தன்னோட அம்மாவையும்.. அப்பாவையும் மார்டி சேர்த்து வைச்சாரா.. 1985 ஆம் வருஷத்துக்குத் திரும்பிப் போனாரான்னு நல்ல நகைச்சுவையோட சொல்லியிருக்காங்க..

Back to the Future Part II (1989)


இந்தப் படமும் 1985 ஆம் ஆண்டுல இருந்தேதான் தொடங்குது..

மார்டியோட குடும்பம் 2015 ஆம் ஆண்டுல சில பிரச்சினைகளால அழியப்போறதை சயண்டிஸ்ட் எம்மெட் தன்னோட டைம் மெஷின் மூலமா தெரிஞ்சுக்கறார்.. அதனால வருங்காலத்தை திருத்தி அமைக்கறதுக்காக.. மார்டி, அவரோட லவ்வர், எம்மெட் 3 பேரும் 2015 ஆம் ஆண்டுக்குப் போயி நிலைமையை சரி பண்ணிடறாங்க.. ஆனா அங்க அவங்க இருந்த சமயங்கள்ல அவங்களுக்கே தெரியாம சில விசயங்கள் நடந்துடுது..

முதல் பாகத்துலயே "ஃபிப்" அப்படிங்கற கேரக்டர் பத்திக் காமிச்சுருப்பாங்க.. இவர்தான் கதையோட வில்லன்.. ஃபிப்பை வைச்சு நிறைய காமெடி இருக்கு முதல் பாகத்துல.. இப்போ 2015 ஆம் ஆண்டுல ஃபிப் கிழவனா இருப்பார்.. மார்டி டைம் மெஷின் மூலமா வந்திருக்கறத ஃபிப் தெரிஞ்சுக்கிட்டு.. மார்டி ஏமாந்த சமயத்துல ஃபிப் டைம் மெஷினை எடுத்துக்கிட்டு.. தன்னோட இறந்தகாலத்துக்குப் போயி.. சில விசயங்களை செய்துட்டு வந்திடறார்.. அதெல்லாம் தெரியாம வேலை முடிஞ்சவுடன் 1985 ஆம் ஆண்டுக்குப் போறாங்க மார்டி குரூப்.. அங்க போனா அவங்களுக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி..

சிட்டியே வன்முறைகளால நாசமாயிருக்கு.. மார்டி ஃபேமிலி அவரோட வீட்லயே இல்ல.. ஃபிப் அந்த சிட்டியிலயே பெரிய பணக்காரர் ஆயிருப்பார்.. மார்டியோட அம்மா ஃபிப்பைக் கல்யாணம் பண்ணியிருப்பார்.. டோட்டலா எல்லாமே மாறியிருக்கும்..

மார்டி குரூப் வருங்காலத்துக்குப் போனப்போ டைம் மெஷினை ஃபிப் திருடிட்டுப் போயி ஏதோ தில்லுமுல்லு பண்ணியிருக்கார்னு மார்டி குரூப் தெரிஞ்சுக்கறாங்க.. அதனால ஃபிப் என்ன பண்ணினார்னு கண்டுபிடிச்சாதான் நிலைமையை சீராக்க முடியும்னு திரும்பவும் 1955 ஆம் ஆண்டுக்குப் போறாங்க மார்டி குரூப்.. அதுக்கப்புறம் ஃபிப் பண்ணின தில்லுமுல்லைக் கண்டுபிடிச்சு நிலைமையை சீராக்கினாங்களானு மீதி கதை நகரும்..

மார்டியும் எம்மெட்டும் அவங்களோட வேலைகளை வெற்றிகரமா முடிச்சுட்டு.. 1985 ஆம் ஆண்டுக்குத் திரும்ப முயற்சிக்கறப்போ ஏற்பட்ட விபத்துல எம்மெட் 1885 ஆம் ஆண்டுக்குப் போயிடறார்.. இதோட படம் முடிஞ்சுடுது..

Back to the Future Part III (1990)


1885 ஆம் ஆண்டுக்குப் போன சயிண்டிஸ்ட் எம்மெட்டைக் காப்பாத்திக் கூட்டி வர்றதுக்காக.. 1955 ஆம் ஆண்டுல வாழ்ந்திட்டிருக்கற சயிண்டிஸ்ட் எம்மெட்கிட்ட போய் திரும்பவும் ஹெல்ப் கேக்கறார் மார்டி.. ரெண்டு பேரும் சேர்ந்து சில வரலாற்று குறிப்புகளைக் கண்டுபிடிக்கறாங்க.. அந்தக் குறிப்புகள்ல எம்மெட் 1885 ஆம் ஆண்டுலயே செத்துப் போயிட்டதா இருக்கு.. அதனால இறந்த காலத்தை மாத்தி அமைக்க 1885 ஆம் ஆண்டுக்கு மார்டி போறார்.. அங்க எம்மெட்டைக் கண்டுபிடிக்கறார்..

எம்மெட்டுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது.. அந்த பிரச்சினைகளை முறியடிச்சு அவரை மார்டி காப்பாத்தினாராங்கறதுதான் மீதிக் கதை..

இந்த மூன்று பாகங்களுமே நல்ல பொழுதுபோக்குத் திரைப்படங்கள்.. முதல் பாகமும், இரண்டாம் பாகமும் நம்மளை கண்டிப்பா சிரிக்க வைக்கும்.. மூன்றாம் பாகம் கொஞ்சம் போரடிச்சது..

நல்லவங்க கையிலோ, கெட்டவங்க கையிலோ.. ஒரு டைம் மெஷின் இருந்தா எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படும்னு நல்ல நகைச்சுவையோட சொல்லியிருக்காங்க..