.

Sunday, January 16, 2011

தனிமைச் சிறகுகள் - முதல் பயணம்

இன்றைய உலகில் இளைஞர்களின் வாழ்க்கை என்பது நாடோடி பொழைப்பாதான் ஆயிடுச்சு.. தங்கள் படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடி சொந்த ஊர்களை விட்டு வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டுட்டே இருக்கோம்.. :-(.. அப்படி வெளியிடங்கள்ல இருக்கற நமக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைக்கும்.. அந்த அனுபவங்கள் நல்ல விதமாகவும் கெட்ட விதமாகவும் இருக்கும்.. எனக்கும் அந்தமாதிரி அனுபவங்கள் இருக்குங்கறதால எனக்கு தெரிஞ்ச விசயங்களை உங்ககிட்ட பகிர்ந்துக்க விரும்பறேன்..

காலேஜ் முடிக்கற வரைக்கும்.. வெளியூர் ட்ரிப் போன நாட்களைத் தவிர.. வீட்டை விட்டு பிரிஞ்சதே இல்லை.. காலேஜ் முடிக்கற வரைக்கும் ஒரே ஜாலிதான்.. எங்க பேமிலில மெம்பர்ஸ் ஜாஸ்திங்கறதால.. வீட்ல இருந்தால் போர் அடிக்கும்ங்கற நேரங்கள் எல்லாம் ரொம்பக் கம்மி.. ஏதாவது டைம் பாஸ் ஆயிட்டே இருக்கும்.. படிக்கற விசயங்களுக்குக்கூட வீட்ல என்னை எதுவும் கேக்க மாட்டாங்க.. "மகனே!! நாங்கள்லாம் படிக்கல.. உனக்கு எங்களை மாதிரி கஷ்ட ஜீவனம் கூடாது.. படிக்க வைக்கிறோம்.. அதுல இருக்கற கஷ்டங்கள் எல்லாம் எங்களுக்குத் தெரியாது.. எப்படி முடியுதோ அப்படி செய்யின்னு சொல்லிடுவாங்க..".. படிச்சு முடிச்சுட்டு ஊர் சுத்திட்டு இருந்தேன்.. எங்கே வேலைக்குப் போறது.. என்ன பண்றதுன்னே தெரியல..

சென்னையின் என் அண்ணன் ஒருவர் வேலை பார்த்துட்டு இருந்ததால.. அங்கே என்னை அனுப்பி வைச்சாங்க.. நானும் வேலைக்குப் போறேன்.. நானும் வேலைக்குப் போறேன்னு ஊர் முழுக்க சொல்லிட்டு கிளம்பியாச்சு.. ஊர்ல இருந்து திண்டுக்கல்ல இரயில் ஏர்ற வரைக்கும் பசங்க வந்தானுங்க.. இரயில் கிளம்பி 5வது நிமிசத்தில் எனக்கு கிடைத்த முதல் அனுபவம் "தனிமை".. ம்ம்ம்ம்.. தனியாகக் காட்ல விடறதுன்னு சொலவடம் சொல்வாங்க இல்லையா.. அந்த ஃபீலிங் எப்படி இருக்கும்னு உணர்ந்தேன்.. பெற்றவர்களைத் தேடித் திருதிருன்னு ரோட்ல நின்னுட்டு இருக்கற குழந்தையின் உணர்ச்சி என்னவாக இருக்கும்னு புரிஞ்சது அப்போ.. ம்ம்ம்.. வீட்டுக்குப் போறேன்னு அழுகாத குறைதான்னு வைங்களேன்.. ஆனால் இனி திரும்பிப் போக முடியாது..

படத்துல வர்றமாதிரி சென்னையில இறங்கியவுடன் என் அண்ணா நின்னுட்டு இருப்பார்னு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனால் அவரைக் காணோம்.. :-(.. வீட்ல வேற நிறைய சூதானம் சொல்லி அனுப்பி விட்டாங்களா.. கொஞ்சம் (நிறைய..:-)..) பயமாக இருந்தது.. வேலை காரணமாக அவரால் என்னை ரிசீவ் பண்ண வரமுடியல.. அங்கேயிருந்து எப்படி அம்பத்தூர் போறதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.. சென்னையில் கண்டக்டர் எந்திரிச்சு வராம டிக்கெட் குடுக்கறது புதுசா இருந்தது.. பயணிகள் டிக்கெட் காசைக் கொடுத்து ஒருதருக்கு ஒருத்தர் பாஸ் பண்ணி வாங்கிக்கறாங்க.. ஆஹா!! நம்ம ஊர்ல கிட்ட வந்து கேட்டாலே.. மூடு இருந்தாத்தான் டிக்கெட் எடுப்போம்.. இங்கே எதுக்கு வம்புன்னு நானும் அப்படியே வாங்கினேன்.. இடையில் யாராவது காசை அப்படியே எடுத்துட்டு ஓடிட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு கவலையாக இருந்தது.. :-)

அம்பத்தூர் வீட்ல என் அண்ணனை மீட் பண்ணிட்டேன்.. அவரோட மொபைலை என் கையில் கொடுத்து.. நான் நேற்றே வளசரவாக்கத்துக்கு மாறிட்டேன்.. எனக்கு இப்போ வேலை இருக்கு.. இந்த மொபைல்ல பாரு.. ஏரியா நேம் டிஸ்பிளே ஆகுது இல்லையா.. நான் சொல்ற பஸ் நம்பர்ல ஏறி.. மொபைலைப் பார்த்துட்டே இரு.. வளசரவாக்கம்னு வந்தவுடன் இறங்கிடுன்னு சொல்லி அனுப்பிட்டார்.. மொபைல்ல அதேமாதிரியே டிஸ்பிளே வந்தது.. கூட்டத்துல இறங்கறதுக்குள்ள அடுத்த ஸ்டாப்பே வந்துட்டுச்சு.. சோ.. சென்னையில் தள்ளுங்கன்னு சொல்லிட்டு இறங்கறது வேலைக்கு ஆகாது.. தள்ளிட்டு இறங்கறதுதான் ஆகும்னு புரிஞ்சது..

என்னுடைய முதல் இண்ட்ர்வியூ.. லிட்டில் மவுண்டன்னு (சின்ன மலை) ஒரு ஏரியால.. அங்கே போறதுக்கு பேப்பர்ல ஒரு பெரிய மேப்பே வரைஞ்சு கொடுத்தார்.. ஐந்து, ஆறு பஸ் மாறிப் போகனும்னு பஸ் நம்பர் எல்லாம் சொல்லிட்டார்.. மேலும் டவுட் இருந்தா.. போற இடங்கள்ல தைரியமாக விசாரின்னு சொல்லி அனுப்பினார்.. பஸ் ஸ்டாப்புல நல்ல கூட்டம்.. அங்கே ஒரு பொண்ணுகிட்ட போய் லிட்டில் மெளண்டன் எப்படிப் போகனும்னு கேட்டா.. என் மேப்ல இருந்த வழிக்கு அப்படியே ஆப்போசிட்ல வழி சொல்லுச்சு அந்தப் பொண்ணு.. என்னடா இது!! இந்த வழி ரொம்ப ஈசியாக இருக்கேன்னு அந்தப் பொண்ணு சொன்ன வழியிலயே போனேன்.. அந்த இடம் ஒரு 15 நிமிசத்துலயே வந்துடுச்சு.. எல்லாருக்கும் போல முதல் இண்டர்வியூ.. அந்த பில்டிங்குள்ள போகவே கால் கூசிச்சு.. மனசெல்லாம் படபடப்பு.. ரொம்ப தயக்கமாக இருந்தது.. செக்யூரிட்டிகிட்ட என் பேரை ஃபீட் பண்றவரைக்குமே.. எந்த நேரமும் திரும்பிடற மூடுலயே இருந்தேன்..

திரும்பி வந்து நடந்ததை எல்லாம் அண்ணன்கிட்ட சொன்னா.. அடப்பாவி!! உன்னை சுத்தவிட்டு.. ஊரைச்சுத்திக் காட்டிடலாம்னு நினைச்சா இப்படி எஸ்கேப் ஆயிட்டயேன்னு ஓட்டிட்டு இருந்தாங்க..

ஒருமாதத்தில.. தாஜ்கோரமண்டலுக்கு ஆப்போசிட்ல இருக்கற ஒரு BPO கம்பெனியில் வேலை வாங்கினேன்.. வேலை ரொம்ப ஈசியாக இருந்தது.. ஆனால் ரொட்டேசனல் ஷிஃப்ட்ல போட்டுக் கொன்னு எடுத்தாங்க.. நேர நேரத்துக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்கிட்டு.. வீட்டுக்கு வாரத்துக்கு ரெண்டுமுறை மட்டும் போன் பேசிக்கிட்டு.. ரோபோ மாதிரி.. வேலை பார்க்கறது.. ரூமுக்கு வந்து தூங்கறதுன்னு இந்த லைஃப் ஸ்டைல் பிடிக்கவே இல்ல.. அப்புறம் ரெண்டு மூனு கம்பெனிகள் மாறினேன்.. நண்பர்கள் கிடைச்சாங்க.. வெளியே அவங்களோட சுத்த ஆரம்பிச்சேன்..

சென்னையில் 8 மாதங்கள் மட்டுமே இருந்ததால அனுபவங்கள் ரொம்பக் கம்மிதான்.. ஆக்சுவலா BPOவில் சேர்றவங்களுக்கு எல்லாம்.. வாழ்க்கையே தூங்கறதும் வேலை பார்க்கறதுமாகத்தான் இருக்கும்..

சென்னையில் பஸ்ல பிக்பாக்கெட் அடிக்கறதைப் பார்த்திருக்கேன்.. நான் பார்க்கறதையும் பார்த்துட்டேதான் அடிச்சானுங்க.. கொஞ்சம்கூட தயங்கல..

நிறைய ஆந்திரா ஸ்டைல் ஹோட்டல்ஸ் இருக்கு சென்னையில.. வாரவாரம் அங்கேதான் அன்லிமிட்டடு மீல்ஸ் கட்டுவோம்..

பஸ்ல ஒருமுறை தொங்கிட்டுப் போயிட்டு இருந்தப்போ.. சடன் பிரேக் போட்டதில என் கை ஸ்லிப்பாயிடுச்சு.. கடைசி சீட்ல உட்கார்ந்திருந்த ஒருவர்.. கப்புன்னு கரெக்டா என் கையைப் பிடிச்சிட்டார்.. ரொம்ப நேரம் உடம்பு நடுங்கிக்கிட்டே இருந்தது.. அதுல இருந்து.. எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் உள்ளே போக முடிந்தால் மட்டுமே பஸ்ல ஏர்றது.. :-)

என்கூட வேலைப் பார்த்த ஒரு பையனும், பொண்ணும்.. ஒரே அபார்ட்மெண்டாம்.. லவ் பண்ணிட்டு இருந்ததுங்க.. அவங்க லவ் சக்சஸ் ஆகறதுக்கு நிறைய சிக்கல் இருந்தது.. இப்போ என்ன ஆனாங்கன்னு தெரியல.. :-)

ம்ம்ம்.. போதும் இனி உங்களுக்குப் போர் அடிக்கும்..

என் அண்ணனுக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சது.. எங்க வீட்ல என்னையும் அண்ணனோடவே போயிடுப்பான்னு சொன்னாங்க.. காலேஜ்ல ரெண்டு நாள் டூர் போயிட்டு வந்த இடத்துக்கு போய் இருக்கப் போறமேன்னு ரொம்ப எக்ஸைட்டிங்கா இருந்தது.. அடுத்து வரும் நாட்களைப் பற்றித் தெரியாததால பெங்களூர் பஸ்ல ஏறிட்டேன்..

(பயணம் தொடரும்)

பயணத்தின் தொடர்ச்சி:

தனிமைச் சிறகுகள் - பெங்களூர் பயணம்

Tuesday, January 11, 2011

குழந்தைகள் ராஜ்ஜியம்

சின்ன வயசுல குழந்தைகள் வளர்க்கப்படற விதமே அவங்களோட கேரக்டரை டிசைட் பண்ணுது..

குழந்தைகளுக்கு பெரும்பாலும் இரண்டு விதமான அனுபவங்கள் கிடைக்குது.. ஒன்னு.. அதிகப்படியான கண்டிப்பு.. ரெண்டாவது அதிகப்படியான செல்லம்..

அதிகப்படியான கண்டிப்புடன் வளர்க்கப்படும் குழந்தைகள் வீட்ல ஒருமாதிரியும்.. வெளியில் ஒருமாதிரியும் நடந்துக்கிறாங்க.. அவர்கள் மேல் விதிக்கப்படும் அதிகப்படியான கண்டிப்பு.. வெளியில் அவர்களை தப்பு செய்யத் தூண்டுது.. வேனும்னே பெத்தவங்க சொல்றதுக்கு ஆப்போசிட்டாக வெளியில் நடக்க ஆரம்பிச்சடறாங்க.. அதுமட்டுமில்லாம.. பெத்தவங்க மேலயும் ஒருமாதிரியான வெறுப்பை வளர்த்துக்கறாங்க..

பெத்தவங்க தங்கள் வாழ்க்கையில் இருக்கற ஏதோ ஒரு வெறுப்பையோ.. அல்லது ஏதோ ஒரு அனுபவத்தையோ பிள்ளைகள் மேல் செயல்படுத்தறதுதான் இந்த அதிகப்படியான கண்டிப்புக்கு காரணமாக இருக்குதுன்னு நினைக்கிறேன்..

நான் சிறுவனாக இருந்தப்போ.. என் வயது ஒத்த நண்பன்.. அவன் வீட்ல எப்போ பார்த்தாலும் அடிவாங்கிட்டேதான் இருப்பான்.. எதுக்கு அடி வாங்கினேன்னு கேட்டால்.. அவனுக்கே ஒன்னும் புரியாது.. சும்மா சிறுவர்கள் சாதாரணமாக செய்யும் சேட்டைகளுக்கே அந்த மாதிரி பலியாக அடி வாங்கிட்டு வருவான்.. சில்லு மூக்கு உடையறது எல்லாம்.. அவனைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அப்பப்போ அவனுக்கு இரத்தம் வரும் மூக்குல.. இதனால சின்ன வயசுலயே.. அவங்க வீட்டு ஆளுங்க மேல பெரிய கோவமே இருந்தது அவன் மனசுல.. ரொம்ப நேரம் எங்க வீட்லயேதான் இருப்பான்.. ரஸ்னா வாங்கிட்டு வந்து எங்க வீட்ல மறைஞ்சு நின்னு வேகவேகமாக சாப்பிட்டு.. ஓடுவான்.. அப்ப எனக்கு ஒன்னுமே புரியலைன்னாலும் அவனைப் பார்த்தால் பாவமாக இருக்கும்..

கொஞ்சம் வளர்ந்தபிறகு வாங்கின அடியெல்லாம் மரத்துப் போக ஆரம்பிச்சிடுச்சு அவனுக்கு.. ஒழுங்காப் படிக்கல.. ஆரம்பத்துல பெத்தவங்களுக்குத் தெரியாம அவங்களைத் திட்டிட்டு இருந்தவன்.. அப்புறம் நேருக்கு நேராகவே திட்ட ஆரம்பிச்சான்.. நண்பர்கள்கிட்டயும் மூர்க்கமாக நடந்துக்க ஆரம்பிச்சான்.. அப்புறம் என்கூட எல்லாம் சேரல.. 8 ஆம் வகுப்போடவோ, 10 ஆம் வகுப்போடவோ ஸ்கூலுக்குப் போறதை நிப்பாட்டிட்டு ஊர் சுத்த ஆரம்பிச்சிட்டான்.. இப்போ எங்க ஏரியாவுல அவனும் ஒரு ரெளடியாம்.. எப்பவாவது நான் எதிர்த்து வந்துட்டாக்கூட.. முகத்தைக்கூட பார்க்க மாட்டான்.. இப்படி அவன் மாற சிறுவயதில் வாங்கிய தேவையில்லாத அடியும்.. பாசமின்மையும்தானே காரணம்..

இந்த வகையில் வருகிற இன்னொரு கிளை வகைன்னு சொல்லலாம்.. என்னன்னா.. கூடபிறந்தவர்களை ஒப்பிட்டோ.. பக்கத்து வீட்டுப் பிள்ளைகளை ஒப்பிட்டோ திட்டறது.. பார் அவன் எவ்வளவு நல்லா படிக்கறான்.. எவ்வளவு ஆக்டிவா இருக்கான்.. அப்படி இப்படின்னு கம்பேர் பண்ணித் திட்டறது.. காம்பேரிசன்ல வர்ற தன்னோட சகோதரனோ அல்லது பக்கத்து வீட்டுப் பையனோ.. திட்டுவாங்கற பையனோட வெறுப்புக்கு ஆளாகறாங்க.. அவனுக்கு என்ன திறமை இருக்குன்னு பார்த்து அதை செய்ய மறுக்கறாங்க நிறையப் பேர்.. அவனுக்கு புரிஞ்சுக்கறதுல கஷ்டம் இருக்கலாம்.. வேற ஏதாவது மனசுல குறை இருக்கலாம்.. அதையெல்லாம் ஆராயறதில்ல.. அடிக்கறது.. சூடு வைக்கறதுன்னு பண்றதால அந்தக் குழந்தைகள்.. மேலும் மந்தமாகிடறாங்க..

நெக்ஸ்ட்.. அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள்..

ஒரே பிள்ளை.. ரொம்ப நாள் கழிச்சுப் பிறந்த குழந்தை.. அப்படி இப்படின்னு பல ரீசன்ஸ்னால குழந்தைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து வளர்க்கப்படறாங்க.. செல்லம் குடுக்கறதுனா என்ன?.. குழந்தைகள் பண்ற தப்புகளை அந்த நேரங்கள்ல கண்டுக்காம விட்டுடறது.. தேவையில்லாத பொருட்களைக் கேக்கும்போதும் வாங்கி வாங்கிக் கொடுத்தடறது.. இந்த மாதிரி பல விசயங்கள் இருக்கு..

இப்போ இருக்கற குழந்தைகள் பெரும்பாலும் பெத்தவங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடறதைப் பார்க்க முடியுது (இதான் பேர்சொல்லும் பிள்ளையோ.. :-)).. பாசத்துல சும்மா விளையாட்டுக்கு கூப்பிடறது வேற.. ஆனால் பழக்கமாகவே இருக்கு.. மற்றவர்களை பட்டப்பெயர் சூட்டிக் கூப்பிட சொல்லிப் பெற்றவர்களே சொல்லிக் கொடுக்கறதையும் பார்க்க முடியுது.. விளையாட்டுக்கு செய்ற இந்தப் பழக்கம் எல்லாம் இடத்துலயும் தொடரும்னு மறந்துடறாங்க இவங்க..

என் சொந்தக்காரப் பையன் ஒருவன்.. பயங்கர செல்லம்.. கேட்டது உடனே வந்தே தீரனும்.. அம்மாவை பேர் சொல்லித்தான் கூப்பிடறான்.. சட் சட்டுன்னு அடிச்சிடறான்.. இதைவிட வெளியிடங்கள்ல அவன் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்துட்டால்.. அவன் வைச்சிருக்கற பொருளைவிட பெட்டரா அது இருந்துட்டா நைசா உடைச்சிட்டு வந்திடறான்.. அவன் வந்தாலே எல்லாம் வீட்ல அலர்ட் ஆயிடுவோம்.. முதல்ல அவங்க வீட்ல சொல்லிப் பார்த்தோம்.. செல்லமாம்.. கண்டுக்கவே மாட்டேங்கறாங்க.. இதெல்லாம் சின்னத் தப்புகளாக இருந்தாலும்.. குழந்தையிலேயே கவனிக்கனும் இல்லையா..

நாம் குழந்தைகள் மேல அக்கறையையும்.. கண்டிப்பையும் சம அளவுல காமிச்சா நல்லதுன்னு நினைக்கிறேன்.. ஆனால் அடிச்சு வளர்க்கறது எப்பவுமே சரியில்ல.. பாசமா சொல்றதைத்தான் எல்லாக் குழந்தைகளும் உடனே கேக்கும்.. குழந்தைகளுக்கு பெத்தவங்களின் கஷ்டங்களையும் சிறிதளவு தெரிய வைக்கனும்..

எங்க வீடு சொல்லப்போனா.. ஒருமாதிரி கூட்டுக்குடும்பம் ஸ்டைல்தான்.. 3 மாமா, 2 சித்தி அப்படின்னு எல்லாருடைய குடும்பங்களும் ஒன்னாவே இருக்கோம்.. மேனேஜ்மெண்ட் மட்டும் தனித்தனி.. வீட்ல ஏஜ் வாரியாக நிறையக் குட்டீஸ்கள் இருக்குதுங்க.. எப்பவும் கயமுய.. கயமுயன்னு ஒரே அலப்பறையாகத்தான் இருக்கும்.. வீட்டுக்குப் போனா.. நேரம் போறதே தெரியாது.. :-)

ஒருமுறை என்னுடைய மாமாவோட மகனும்.. சித்தியோட மகனும் பேசிட்டு இருந்தானுங்க.. ரெண்டு பயலுகளும் 2வது படிக்கறானுங்க.. ஒருத்தன் டேய்.. இப்போ நாம படிக்கற ஸ்கூல் எனக்குப் பிடிக்கலைடா.. நாம பேசாம அக்ஷயா ஸ்கூல்ல சேர்ந்துக்கலாம் என்ன சொல்றன்னு கேக்கறான்.. இன்னொருத்தன்.. நானும் அதைத்தாண்டா யோசிச்சுட்டு இருக்கேன் அப்படின்னு டாக் போயிட்டு இருந்தது..

நான் இடையில போய் ஏங்கடா.. அந்த ஸ்கூல்ல படிக்க வைக்க காசு நிறைய வேனுமேடா.. உங்கப்பா எப்படிடா கட்டுவார்னு கேட்டா.. இல்லண்ணா.. அப்பா என்னை ரொம்பக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கறதாகச் சொன்னார்.. அதனால இந்த ஸ்கூலுக்கும் கஷ்டப்பட்டு பணம் கட்டி படிக்க வைச்சிடுவார் அப்படிங்கறான்.. எப்படிப் பாருங்க.. :-).. சரிதாண்டான்னு சிரிச்சுட்டே அவனுங்க பேச்சுகளை கவனிச்சுட்டு இருந்தேன்..

என்னோட ரெண்டாவது மாமாவுக்கு இரண்டு பசங்க.. ஒருத்தன் இப்போ 1வது படிக்கறான்.. இன்னொருத்தன் இப்போதான் எல்.கே.ஜி. படிக்கறான்.. சின்னவனுக்கு எப்பவும் எதுவுமே அவன் அண்ணனுக்கு கிடைக்கறதுக்கு முன்னாடியே கிடைக்கனும்.. ஒருமுறை பெரியவன்.. ஏம்மா எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைப்பீங்கன்னு கேக்கறான்.. ஏண்டா மகனே!! உடனே பண்ணிடலாம்ண்டான்னு சிரிச்சுட்டே சொன்னா.. உடனே எனக்குத்தான் முதல்ல கல்யாணம் பண்ணனும்னு சின்னவன் அழுக ஆரம்பிச்சிட்டான்.. அவனை அடக்கவே முடியல.. ஒரே சிரிப்பு..

இந்தமாதிரி பலவிசயங்கள்.. :-).. சொல்லிட்டே போகலாம்..


இந்த மாதிரி நிறைய அறிவாளித்தனமான பேச்சுகள் இப்பவே குழந்தைகள்கிட்ட.. டிவி சேனல்களைப் பார்த்து நிறைய தெரிஞ்சுக்கறாங்க.. இந்தமாதிரி எல்லாக் குட்டீஸ்களும் பண்ற சேட்டைகளைப் பார்த்துட்டே இருக்கலாம்..

குழந்தைகள் வளர்ப்புங்கறது பெரிய கலைதான்.. ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு டேலண்டோட.. சூழ்நிலையைப் பொருத்து அவங்களோட குணாதியங்கள் நிர்ணயிக்கப்படுது.. நல்லபடியாக ட்யூன் பண்ணி வளர்க்க வேண்டியது நம்ம கையில இருக்கு இல்லையா.. :-)

Thursday, January 6, 2011

பெண்ணுக்கு என்ன வேண்டும்?

பசங்க எல்லாம் ஏதாவது பொருள் வாங்கப் போறோம்னா.. ரொம்ப நேரம் எடுத்துக்க மாட்டோம்.. ஆனால் பொண்ணுங்க அப்படிக் கிடையாது.. புடவைக் கடை, நகைக்கடையில் இருந்து சின்ன க்ளிப் வாங்கறதாக இருந்தால்கூட.. ரொம்ப நேரம் தேடிட்டே இருந்தால்தான் அவங்க மனசுக்குத் திருப்தியாக இருக்கும்.. வாங்க வேண்டிய பொருள் எடுத்தவுடனே சிறப்பாக அமைந்தாலும்.. கொஞ்ச நேரமாவுது வேற ஏதையாவது தேடிட்டு வாங்கினாத்தான் அவங்களுக்கு மனசு ஆறும்.. பெஸ்டாக இருக்கறதை விட்டுடக் கூடாதேங்கற மனநிலையும்.. திருப்தியின்மையும்தான் காரணம்..

பொண்ணுங்க மனசுல என்ன ஓடிட்டு இருக்கு.. அவங்க எதை விரும்பறாங்க அப்படிங்கறதை தெரிஞ்சிக்கிட்டால் எல்லாமே சுலபமாயிடும்.. கண்டிப்பாக பொண்ணுங்களுக்கு பொண்ணுங்க.. என்ன நினைக்கறாங்கன்னு சொல்ல மாட்டாங்க.. அப்படியிருக்க ஒரு ஆணால் அவங்க மனசைப் படிக்க முடிந்தால்.. பொண்ணுங்க மனசுக்குள்ள திங்க் பண்ற எல்லா விசயங்களையும் கேட்க முடிந்தால்.. எல்லா பிரச்சினைகளும் சால்வ்டு இல்லையா..

அப்படி ஒருத்தர்தான் நம்ம ஹீரோ.. சரி அவரைப் பற்றி ஒரு இன்ட்ரோடக்சன்..

நிக் மார்சல் (மெல் ஜிப்சன்).. ஒரு விளம்பரக் கம்பெனியில வேலை பார்க்கறவர்.. அவருக்கு கல்யாணமாகி டைவர்சும் ஆயிடுச்சு.. ரெண்டு பேருக்கும் 15 வயசுல ஒரு பொண்ணும் இருக்கு..

பொண்ணுங்களைக் கவுக்கறதுலயும்..  கம்பெனியில் ஆண்களுக்கான விளம்பரங்களை உருவாக்குவதிலும் வல்லவராக இருக்கார் நம்ம ஹீரோ.. நிறையப் பொண்ணுங்களுக்கு அவரைப் பிடிச்சிருந்தாலும்.. மனசுக்குள்ள நிறையப் பேர் அவரைத் திட்டிக்கிட்டும் இருக்காங்க..

கம்பெனிக்கு அடுத்த மேனேஜராகப் போறோம்னு நிக் மார்சல் நினைச்சுட்டு இருக்கப்போ.. அவரோட பாஸ்.. ஒரு பொண்ணை அவரோட டிவிசனுக்கு மேனேஜாராக நியமிக்கறார்.. அவங்க கம்பெனி அடுத்து தயாரிக்கப்போற அடுத்த பிராடெக்ட் பொண்ணுங்களுக்கானது.. அப்புறம் புதுசா வந்திருக்கற பொண்ணு ரொம்ப திறமைசாலி.. அதனாலதான் உனக்கு அவரை மேனேஜராக்கினேன்னு சொல்றார் அவரோட பாஸ்..

இந்த சமயத்துல ஹீரோவோட எக்ஸ்-ஒய்ஃப்க்கு மேரேஜாகுது.. அவங்க ஹனிமூன் போகனுங்கறதால.. நிக் மார்சல் அவரோட பொண்ணை கொஞ்ச நாள் பார்த்துக்க வேண்டியிருக்கு.. அந்தப் பொண்ணுக்கு அவரைக் கண்டாலே பிடிக்கல.. சின்ன வயசுலயே ஒரு பாய் பிரண்ட் வைச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கு.. அட்வைஸ் பண்ணப் போற நிக் மார்சலையும் நீ யார் என்னக் கேக்கறதுன்னு திட்டிடுடுது..

தனக்குப் பதிலாக ஒரு பொண்ணை மேனேஜராக நியமிச்சிட்டதாலவும்.. தன் பொண்ணு இன்சல்ட் பண்றதாலவும் கடுப்பா உட்காந்திருக்கார் நிக் மார்சல்.. அன்னைக்கு நைட் ஆக்சிடெண்டா எலக்ட்ரிக் ஷாக் அடிச்சி மயக்கமாகிடறார்..

அடுத்த நாள் ஆபிஸ் போறவருக்கு பெரிய அதிர்ச்சி.. அவரை சுற்றி இருக்கற பொண்ணுங்க எல்லாம் மனசுல என்ன நினைக்கறாங்கன்னு தெளிவாக அவருக்கு கேக்குது.. முதல்ல இந்த மாதிரி கேக்கறது அவருக்கு பெரிய தலைவலியாக இருந்தாலும்.. தனக்கு சாதகமாக இந்த பிரச்சினையைப் பயன்படுத்திக்கனும்னு முடிவெடுக்கறார்..

அப்ப இருந்து.. அவர் மேனேஜரோட தாட்ஸை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு.. அவரோட ஐடியாக்களைத் திருடி.. கம்பெனியில் நல்ல பெயர் வாங்கறார்.. கூட வேலை பார்க்கற பொண்ணுங்களோட எண்ணங்களைப் புரிஞ்சுக்கிட்டு எல்லாருக்கும் நல்ல பிள்ளையாயிடறார்.. தன்னோட பொண்ணுகூட ராசியாகிறார்.. மேனேஜராக வந்திருக்கற பொண்ணும் அவர் மேல இம்ப்ரஸ் ஆகி லவ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க.. அவரோட முழு ஐடியாக்களையும் திருடி.. பொண்ணுங்களுக்கான ஒரு விளம்பரப் படத்தை சக்சஸ்புல்லாக எடுத்து.. அவரோட பாஸ்கிட்ட நல்ல பெயர் வாங்கறார் ஹீரோ..

தன்னோட மேனேஜரோட ஐடியாக்களைத் திருடினாலும்.. அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா இருக்கறதால.. நிக் மார்சலோட கேரக்டரும் கொஞ்சம் கொஞ்சம் சேஞ்ச் ஆகி ரொம்ப நல்லவராயிடறார்.. முதல்ல இருந்தே.. இவர் செய்த தில்லு முல்லுகளால அந்த மேனேஜர் பொண்ணுக்கு வேலை போக.. அந்தப் பிரச்சினையையும்.. அவரைச் சுற்றியிருந்த வேறு சில பிரச்சினைகளையும் எப்படி சால்வ் பண்றார்னு ரொம்ப காமெடியாக சொல்லியிருப்பாங்க படத்துல..

முழுக்க முழுக்க காமெடியான படம்..

பிரேவ் ஹார்ட், தி பேசன் ஆஃப் தி கிரிஸ்ட், அபோகாலிப்டோ போன்ற செம ஹிட்டான சீரியசான படங்களை இயக்கியவர் மெல் ஜிப்சன்.. இந்தப் படத்துல காமெடியிலும் படம் முழுக்க கலக்கியிருக்கார்..

விவேக்கூட இந்தப் படத்தை வைச்சித்தான் ஒரு படத்துல காமெடி டிராக் அமைச்சிருந்தார்..

"எந்தக் காரணமும் இல்லைனாலும் பொண்ணுங்க எப்பவுமே கவலைப்பட்டுட்டே இருக்கீங்க" அப்படின்னு சொல்வார் ஹீரோ..

அவருடைய பொண்ணு.. மனசுல நினைக்கிற விசயங்களை கேக்க நேர்றப்போ அவரோட அவஸ்தை நமக்கு ரொம்பக் காமெடியாக இருக்கும்..

மேனேஜராக வர்ற பொண்ணு.. மெல் ஜிப்சன் மேல இம்ப்ரஸ் ஆகற சீனைப் பற்றியெல்லாம் நான் சொன்னா நல்லா இருக்காது.. பாருங்க.. ரொம்ப ரசித்துப் பார்க்க முடிந்தது..

இன்னும் நிறையக் காட்சிகளை சொல்ல முடியும்.. ஆனால் எல்லாம் அடல்ஸ் ஒன்லி ஜோக்ஸா (ஒன்லி ஜோக்ஸ் மட்டும்தான் :-)) இருக்கறதால நீங்களே பார்த்து எஞ்ஜாய் பண்ணுங்க..

Wednesday, January 5, 2011

பழனிக்கு வாங்க - நம்ம ஏரியா!

முன் குறிப்பு: தமிழ் மணம் விருதுகள் மூன்றாம் சுற்றுக்கு என்னுடைய Shutter Island - திரைவிமர்சனம் பதிவு தேர்வாயிருக்கு.. இந்தப் பதிவுக்கு வாக்களித்து என்னை மூன்றாவது சுற்றுக்கு நகர்த்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.....
பழனி ஒரு கோயில் நகரம்னு பலருக்கு முன்பே தெரிஞ்சிருக்கும்.. முருகன்.. சிவபெருமான்கிட்ட கோவிச்சுட்டு நம்ம ஊருக்கு வந்துதான் செட்டில் ஆயிட்டார்.. தென் இந்தியாவில் திருப்பதிக்கு அப்புறம்.. அதிகமான வசூலைப் பெருவதும் நம்ம பழனி மலை முருகன்தான்..

பழனி மலைக்கு வர்ற பக்தர்கள் பெரும்பாலானவங்க கேரள மக்கள்தான்.. அவங்களுக்கு என்னமோ முருகன் மேல அவ்வளவு கிரேஸ்.. என்னுடைய மலையாளி நண்பன் ஒருவன்கிட்ட இதைப்பற்றிக் கேட்டதுக்கு.. பழனி முருகரோட பார்வை கேரளாவைப் பார்த்த மாதிரி இருக்காம். அதனாலதான்.. கேரளா நல்லா செழிப்பாக இருக்குதாம்.. அதனாலதான் எங்க மக்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்னு பதில் சொன்னான்.. இதுதான் சரியான காரணமான்னு தெரியலை எனக்கு..

நான் படிச்ச காலேஜை பழனி மலை தேவஸ்தானம்தான் நடத்திட்டு வருது.. அதனால படிக்கறப்போ எங்களுடைய ஐ.டி. கார்டு முருகனைப் பார்க்கறதுக்கு ஒரு பாஸ் மாதிரி.. அதைக் காமிச்சுட்டு ஸ்பெசல் தரிசனம் வழியில நாங்க போக முடியும்.. (:-))..

சரி இப்ப முருகனை தரிசிக்கலாம் வாங்க..

பஸ் ஸ்டாண்டை விட்டு இறங்கினவுடனே.. மலைக்கு எந்த வழியில் போகணும்னு யாரையும் கேக்கவே தேவையில்லை.. மலை தெரியற பக்கம் இரண்டு பாதைகள் போகும்.. எந்த பாதையில போனீங்கன்னாலும் மலைக்குப் போயிடலாம்.. மலைக்குப் பக்கத்தில் சன்னிதி ரோட்டைப் பிடிக்கறப்போ.. அங்கே திருஆவினன்குடியில குழந்தை முருகனை ஒரு விசிட் அடிக்க வேண்டியிருக்கும் நீங்க.. கோயிலுக்கு வர்றவங்க எல்லாரும் இங்கே குழந்தை முருகனை கும்பிட்டுட்டுதான் மேல போறாங்க..

இந்தக் கோயில்ல தினமும் நைட் 8 மணிக்கு டான்னு பெல்லு அடிச்சவுடனே பொங்கல் தருவாங்க பாருங்க.. சான்ஸே இல்ல.. நெய்யொழுக அருமையான டேஸ்டுல இருக்கும்.. காலேஜ் படிக்கறப்போ.. நண்பர்கள் எல்லாரும் கோயிலுக்கு சாமி கும்பிடப் போறேன்னுட்டு போய் பொங்கல் வாங்கித் திம்போம்..

இந்தக் கோயில் மாடத்துல புலிபடம் வரைஞ்சிருப்பாங்க.. எந்த டைரக்சன்ல நின்னு மேல பார்த்தாலும் நம்மலைப் பார்க்கற மாதிரியே இருக்கும் ஓவியம்.. கலக்கியிருக்காங்க வரைஞ்சவங்க.. உள்ளே முருகனை சுற்றி நிறைய சாமி சிலைகள் இருக்கும்..

அப்புறம் முருகனோட திருவிளையாடல்களை ஓவியங்களாக வரைஞ்சி மேல மாட்டியிருப்பாங்க.. குழந்தை முருகனை வேண்டிக்கிட்டு வெளியே வந்தா சன்னதி ரோடு..

இப்போ மலைக்கு கீழே இருக்கற பாதவிநாயகருக்கு ஒரு வணக்கம் போட்டுட்டு மேலே ஏற ஆரம்பிச்சா.. நீங்க இரண்டு விதமான பாதைகளைப் பார்க்கலாம்.. வயசானவங்களும்.. குழந்தைகளுக்கும் வசதியாக மலை மேல போறதுக்கு வின்ச், ரோப் கார்லாம் கூட இருக்கு..

முருகனைப் பார்க்கறதுக்கு இங்க.. பொது தரிசனம்.. 10ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய்னு வழிகள் அமைச்சிருக்காங்க.. காசுக்கு தகுந்த மாதிரி.. நாம முருகனை மீட் பண்ண சுத்தற பாதைகள் கம்மியாகும்..
இங்கே இருக்கற முருகனோட சிலையை போகர்னு ஒரு சித்தர் நிறைய மூலிகைகளைக் கொண்டு செய்திருக்கிறாரு.. முருகனை வேண்டிக்கிட்டு தீர்த்தத்தைக் குடிக்கிற மக்களோட நோய்கள் எல்லாம் குணமாயிடறதால.. நிறைய மக்கள் வர ஆரம்பிக்க.. அந்தக் காலத்தில பழனி ஏரியால அரசாட்சி பண்ணிட்டு இருந்த சேரமான் அப்படிங்கற மன்னர் இந்தக் கோயிலை எடுத்துக் கட்டியிருக்கிறார்.. அப்புறம் நிறைய மன்னர்கள் கைக்குப் போய் நிறைய ஆல்ட்ரேசன் பண்ணி.. இப்போ நாம பாக்கற கோயில் வரைக்கும் நிறையா மாறுதல்கள் பண்ணியிருக்காங்க..

முருகனுக்கு ராஜ அலங்காரம், ஆண்டி அலங்காரம்னு நிறைய அலங்காரங்கள் இருக்கு.. மாற்றி மாற்றி பண்ணிட்டு இருப்பாங்க.. என்ன பேசிஸ்லன்னு எனக்குத் தெரியாது.. :-)

அப்புறம் பழனிக்கு வர்ற பக்தர்கள்கிட்ட நம்ம ஆளுங்க.. ஏமாற்றி மொட்டை அடிச்சு விட்டுடறாங்க அப்படிங்கறது பரவலாக இருக்கற ஒரு குற்றச்சாட்டு.. ஆனால் எல்லா சுற்றுலாத் தளங்கள்லயுமே நடக்கற விசயம்தானே இது.. அதனால நாமதான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்..

முருகனைப் பார்க்கற ஆவல்ல பழனியில எந்த மூலையில் வந்து இறங்கினாலும்.. மலையோட தோற்றத்தைப் பார்த்து பக்தர்கள் பிரமிச்சு நின்னுடறாங்க.. அவங்க ஆ!!ன்னு பார்த்துட்டு நிக்கறதைப் பார்த்துட்டு அவங்களை ஏமாற்றறதுக்கு நிறையப் பேரு பஸ் ஸ்டாண்டுலயே வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. எந்த பஸ் வந்து நின்னாலும் சரி.. மலைக்குப் போறவங்க எல்லாம் இந்தப் பக்கம் போங்கன்னு சொல்லிட்டு நாலுபேர் வந்து நின்னுடுவாங்க.. அவங்களைக் கண்டுக்காம போறவங்க தப்பிச்சாங்க.. அடடா! எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க.. இப்படி பஸ்ல இருந்து இறங்கினவுடனே.. வழி கேக்காமலே நமக்கு வழி சொல்றாங்களேன்னு நினைச்சுட்டு அவங்க பக்கம் ஒரு லுக் விட்டாலே போதும்.. ஊர் திரும்பறப்போ.. அவங்க மொட்டையே அடிக்கலைன்னாலும்.. அடிச்சு குளுகுளுன்னு சந்தனம் பூசி தாட்டி விட்டுடுவாங்க..

அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு.. மலையை நோக்கி நடக்க ஆரம்பிச்சா.. நிறைய பஞ்சாமிர்தக் கடைகளும்.. பூஜை சாமான்கள் விக்கற கடைகளும் வரும்.. வேடிக்கை பார்த்துட்டே போயிட்டு இருக்கற பகதர்கள்கிட்ட.. சன்னதி ரோட்லயே செருப்பு போட்டுட்டு நடக்கக்கூடாது.. இங்கேயே கழட்டிவிட்டுட்டு பூஜை சாமான்களை வாங்கிட்டு போங்கன்னு கையைப் பிடிச்சு இழுத்தே சொல்லுவாங்க.. இதை நம்பி நிறையப் பேர் அங்கேயே செருப்பை கழட்டி விட்டுட்டுப் போறதையும் பார்த்துருக்கேன்..

மலை மேல ஏற ஆரம்பிச்சவுடனே.. எவன் மூஞ்சியைப் பார்த்தா ரொம்ப ஏமாளியாத் தெரியுதுன்னு பார்த்து.. திடீர்னு வந்து.. உங்க நெத்தியில திருநீரைப் பூசிவிட்டு.. கையிலயும் சின்ன ஒரு வேலைக் கொடுத்துட்டு.. முருகனுக்கு நீங்க காணிக்கைப் போட்டாத்தான் இப்போ நகர முடியும்னு நின்னுக்குவாங்க.. இதெல்லாம் 5 செகண்டுக்குள்ள நடந்திடும்.. என்னடா நடந்ததுன்னே தெரியாம அவங்ககிட்ட 10,20ரூபாய் கொடுத்துட்டு மேல ஏறவேண்டியிருக்கும்.. சின்னப் பையனாக இருந்தப்போ எனக்கும் இப்படி நடந்திருக்கு.. அப்புறம் இதே ஊர்னு சொன்ன உடனே ரிலீஸ் பண்ணிட்டாங்க.. என்ன ஒரு தொழில் தர்மம் பாருங்க. கோவிலுக்கே போனாலும் நாமதான பாதுகாப்பா இருந்து ஏமாறாம தரிசனம் பண்ணிட்டு வரனும்.. அப்பதான் அதோட பலன் கிடைக்கும் இல்லீங்களா..

சரி இப்பவே பதிவு பெருசாயிட்டதால இத்தோட முடிச்சிக்கறேன்.. இனி நம்ம ஊரைப் பத்தியும் அடிக்கடி எழுதறேன்..