.

Wednesday, September 15, 2010

மேஜிக் ஷோ - பாகம் 1

சின்ன பசங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வயசு வித்தியாசம் இல்லாம.. ரசிக்கர சில விசயங்கள்ல மேஜிக்கும் ஒன்னு.. எனக்கும் மேஜிக் ரொம்பப் பிடிக்குங்க.. எங்க வீட்டிலேயே ஒரு மெஜிசியன் இருக்கார்.. எங்க மாமா..

எப்ப ஷோ பண்றதா இருந்தாலும் அதுக்கு முந்தின நாள் எங்க வீட்டிலதான் ட்ரையல் நடக்கும்.. எங்க எல்லாத்தையும் உக்கார வைச்சு அடுத்த நாள் பண்ணப்போற மேஜிக்கை எல்லாம் செய்து காட்டுவார்.. வீட்டில எல்லாரும் அசந்து போய் பார்த்துட்டு இருப்போம்.. அவர் பண்ற மேஜிக்குகளோட ட்ரிக்குகளைத் தெரிஞ்சுக்கறதுக்கு எல்லாரும் ரொம்ப முயற்சி பண்ணுவோம்.. ஆனா தலைகீழா நின்னாலும் சொல்லமாட்டார்.. தொழில் தர்மம் அப்படிம்பார்..

நான் காலேஜ் போயிட்டிருந்தப்போ.. மேஜிக் பண்ணினா அங்கே பாப்புலர் ஆயிடலாம்னு எங்க மாமாகிட்ட கெஞ்சிக் கூத்தாடி.. அவருக்கு அசிஸ்டெண்டா சேர்ந்துட்டேன்.. அவர் அளவுக்கு பண்ணமாட்டேன்னாலும் கொஞ்சம் நல்லா பண்ணுவேன்.. எப்பவுமே ஒரு மெஜிசியனுக்கு மேஜிக்குகள் 50% இருந்தா.. பேச்சுத்திறமை 50% இருக்கனும்.. பார்வையாளர்களை பேச்சினாலாயும் பார்வையாளையும்.. தான் சொல்றதை நம்ப வைக்கனும்.. என்ன சொன்னாலும் செய்ய வைக்கனும்..

மேஜிக் ஆர்வத்துல நிறைய டிவி மேஜிக் ஷோக்களையும் விரும்பிப் பார்ப்பேன்.. அதுல டேவிட் கூப்பர்ஃபீல்டு அப்படிங்கறவர் மேஜிக் எல்லாம் ரொம்ப அசத்துங்க.. அவரோட மேஜிக்ல என்னை இம்ப்ரஸ் பண்ணின ஒன்னை உங்களுக்கு காமிக்க விரும்பறேன்..

என்னங்க நீங்களும் அசந்துட்டீங்களா.. ஆக்சுவலா இது மைன்ட் டிரிக் மேஜிக்.. நல்லா யோசிச்சா கண்டுபிடிச்சிடலாம்..

பெரும்பாலும் எல்லாரும் என்ன ட்ரிக்குனு கண்டுபிடிச்சுடுவீங்க.. ஆனாலும் புதுசா படிக்கறவங்களுக்கு சுவாரசியம் வேணும்கறதால உங்க கமெண்ட்சை கடைசில பப்ளிஷ் பண்றேங்க..

இந்த மாதிரி என்னை அசத்தின மேஜிக்குகளை தொடர்ந்து உங்களோட பகிர்ந்துக்கறேன்..


Wednesday, September 8, 2010

கிள்ளியூரின் அழகும்.. ஆபத்தும்..

கிள்ளியூர் ஃபால்ஸ்
நம்ம எல்லாரும் என்னதான் நகரத்துல வாழ்ந்து பழக்கப்பட்டிருந்தாலும்.. மலைப்பகுதிகளுக்குப் போனோம்னா அங்க நாம பார்க்கற இயற்கை காட்சிகளும்.. சுத்தமான காற்றும்.. எவ்வளவு கவலைகள்ல நாம இருந்தாலும் மறக்கடிக்கும்.. நாம அங்கயே தங்கிடக்கூடாதான்னு நினைக்க வைக்கும்..

நானும் அந்த வகைதாங்க.. அந்த மாதிரி இயற்கை சூழ்ந்த பகுதிகள்ல வாழனும்னு ஆசைப்படறவன்.. அந்த ஆசையை முழுசா நிறைவேத்திக்க முடியலைனாலும் அப்பப்ப ஏதாவது மலைத்தொடர்களுக்கு விசிட் அடிச்சிட்டே இருப்பேன்.. அதுவும் எங்க ஊர்ல இருந்து கொடைக்கானலுக்கு 69 கிலோமிட்டர்தான்.. ஊர்ல இருந்த வரைக்கும் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து குறைஞ்சது வாரத்துக்கு ஒருமுறை மலையடிவாரத்துக்காவது போய் பொழுதைக் கழிச்சுட்டு வருவோம்.. ஆனால் அந்த நினைவுகள் பத்தி நான் அப்புறம் சொல்றேங்க..

நானும் என்னுடைய சேலம் நண்பரும் ஏற்காடு போலாம்னு ரொம்ப காலமா திட்டமிட்டிருந்தோம்.. ஏற்காடுல சுத்திப் பார்க்கற இடங்கள் ரொம்ப கம்மிதான்.. அதனால ஊட்டி, கொடைக்கானல் மாதிரி மனிதர்கள் அதிகமா கண்ணு வைக்காத இடமா இருக்குது.. நம்முடைய மெக்கானிக்கல் லைஃப் இல்லாம ஒருநாள் அங்க போய் இருந்துட்டு வரலாம்.. என் நண்பருக்கு ஏற்காடுல இருக்கற எல்லா இடங்களுமே நல்லா தெரியும்..

ஏற்காடு லேக்ல இருந்து ஒரு 3 கிலோமிட்டர் தூரத்துல கிள்ளியூர் ஃபால்ஸ்னு ஒரு இடம் இருக்கு.. அங்க போலாம்ங்கறதுதான் எங்களோட மெயின் பிளான்.. அந்த ஃபால்ஸ் என்னடான்னா போனோமா.. பார்த்தோமா.. குளிச்சோமா.. அப்படின்னு எல்லாம் இல்ல.. காட்டுப்பாதை வழியா ஒரு 1600ft கிழே இறங்கனுமாம்.. எப்பவும் மேலிருந்து கீழ் நோக்கி இறங்கறப்போ சரசரன்னு எல்லாரும் இறங்கிடுவோம்.. கஷ்டமாக இருக்காது.. ஆனா இந்த ஃபால்ஸுக்கு போறதுக்கு நிறைய ஜாக்கிசான் வேலை எல்லாம் பண்ண வேண்டி இருந்தது..  ஆனா அருவியைப் பார்த்துட்டோம்னா அந்த கஷ்டங்கள் எல்லாம் மறைஞ்சே போயிடுங்க.. ஆஹா!.. எவ்வளவு அருமையான இடம் அது..
அந்தப் பனிமூட்டத்துக்குள்ள இறங்கிப் போகனும்..
நாங்க அருவிக்கு போன சமயம் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் நடந்தது.. அருவி இருக்கற இடத்துல எங்க வண்டியை நிப்பாட்டினப்போ ஒரு பெங்களூர் ரெஜிஸ்ட்ரேசன் கார் நின்னுட்டு இருந்தது.. ஆஹா! எங்க போனாலும் நம்மளை பெங்களூர் விடமாட்டேங்குதேன்னு நினைச்சிட்டு கீழே இறங்க ஆரம்பிச்சோம் நாங்க ரெண்டு பேரும்.. கொஞ்ச தூரத்துலயே அந்த வண்டிக்கு சொந்தக்காரங்களைப் பிடிச்சிட்டோம்.. அது ஒரு பையனும் பொண்ணும்.. உடனே தப்பா நினைச்சிடாதீங்க.. லவ்வர்ஸ் மாதிரிதான் தெரிஞ்சாங்க.. ரிச்சா தெரிஞ்சாங்க.. அதனால தப்பு செய்ய இவ்வளவு தூரம் வரத் தேவையில்ல.. ஃபால்ஸை ரசிக்கவே வந்திருக்காங்க..

நாங்க அவங்க ரெண்டு பேரையும் கிராஸ் பண்ணி இறங்க ஆரம்பிச்சிட்டோம்.. பொண்ணு ரொம்ப அழகாவே இருந்துச்சு.. இவ்வளவு அடர்த்தியான காட்டுப்பாதையில எந்த நம்பிக்கையில ஒரு பொண்ணை அழைச்சிட்டு வர்றான்னு திட்டிக்கிட்டே இறங்கிட்டு இருந்தோம்.. நாங்க மலை இறங்கற லாகவத்தைப் பார்த்து எங்களை ஃபாலோ பண்ணி வர ஆரம்பிச்சிட்டாங்க அவங்க.. கொஞ்ச தூரத்துல "குடி"மக்கள் 2 பேரு அருவியில குளிச்சுட்டு மேல ஏறிட்டு இருந்தாங்க.. ரெண்டு பயலுகளும் அந்த பொண்ணு மலை இறங்கறதை குரு குருன்னு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. நாங்க அவனுகளைக் கடக்கறப்போ.. மாப்ளை பயலுக சின்னப்பயலுகதான் என்ன சொல்றன்னு பேசிக்கறது எங்க காதுல விழுந்தது.. எவ்வளவு அபாயம் இது.. எங்களுக்கு பின்னால இறங்கிட்டு இருந்த அது ரெண்டுகளுக்கும் அது புரிஞ்சதான்னு தெரியல.. அந்தப் பொண்ணு.. அந்தப்பையன் இருக்கற நம்பிக்கையில வந்திருக்கு.. பாதுகாப்பு இல்லாம இப்படி கூட்டி வரலாமா ஒரு பொண்ணை அவன்.. கொஞ்சம் புத்தி வேண்டாமா.. ஆனா எதும் அசம்பாவிதமா நடக்கலை.. அவனுக ஓவர் மப்புல இருந்ததால மேல ஏறிப்போயிட்டானுக..

ஃபால்ஸ் வந்துட்டோம்.. அதுக மாத்தி மாத்தி போட்டோக்கு போஸ் குடுத்துட்டு இருந்ததுங்க.. நேரம் போனதே தெரியல.. ரெண்டு மணி நேரம் குளிச்சு என்ஜாய் பண்ணிட்டு கிளம்பிட்டோம்.. நாங்க கிளம்பறப்போ அதுகளும் வந்து ஒட்டிக்கிச்சுங்க..

இந்த இடத்துக்கு பொண்ணுக வர்றதே தப்புன்னு சொல்லலை.. ஆனா நிறைய செக்யூரிட்டி ஏற்பாடுகளோடதான் வரணும் இல்லையா.. அவன் ஹீரோன்னு அந்தப் பொண்ணு நினைச்சுட்டு இருக்கும்.. பிரச்சினையாச்சுனா?..

கண்ணு வெளிய வந்துடுச்சுன்னு சொல்வாங்களே.. மேல ஏறி ரோட்டைப் பிடிக்கறதுக்குள்ள அப்படிதான் ஆயிடுச்சு.. நல்லவேளை ஒரு சின்னக்கடை அங்க வைச்சிருக்காங்க..ஒரு ஜூஸ் குடிச்சிட்டு கிளம்பிட்டோம்..


Tuesday, September 7, 2010

லேப்டாப்பில் ஒலியைக் கூட்ட வேண்டுமா?

நமக்கு லேப்டாப்ல படம் பார்க்கற பழக்கம் இருக்கும்.. ஆனா படம் பார்க்கறப்போ சவுண்ட் ரொம்பக் கம்மியா கேக்கறதா ஃபீல் ஆவோம் இல்லைங்களா.. அதுவும் கொஞ்சம் இறைச்சலான இடங்கள்ல பார்தோம்னா படத்துல என்ன பேசறாங்கன்னே கேக்காது.. அதனால பெரும்பாலானவங்க ஹெட்போனோ அல்லது ஸ்பீக்கர்ஸோதான் கனைக்ட் பண்ணியிருப்போம்..

நான் "KMPlayer" அப்படிங்கற பிளேயர் யூஸ் பண்றேங்க.. இதுல படம் பார்த்தோம்னா அந்த பிரச்சினையே இல்ல.. நல்லா சவுண்ட் வருது.. நிறைய வசதிகள் கொடுத்துருக்காங்க.. பெரும்பாலானவங்களுக்கு சப்டைட்டில் யூஸ் பண்ணி படம் பார்க்கற பழக்கம் இருக்கும்.. இந்த பிளேயர்ல சப்டைட்டிலை நாமே எடிட் பண்ற மாதிரி வசதிகள் எல்லாம் கொடுத்திருக்காங்க.. 
 
உதாரணத்துக்கு சொல்லனும்னா சில படங்கள்ல டயலாக் டெலிவரிக்கும் சப்டைட்டில் டிஸ்பிளே ஆகறதுக்கும் வேரியேசன் இருக்கும் இல்லையா.. அந்த மாதிரி ஆகறப்போ நம்மளே அதை சரி செய்யமுடியும் இதுல இருக்கற ஆப்சன் வைச்சு.. இன்னொரு ஆப்சன்.. நாம ஒரு சப்டைட்டில் டவுன்லோட் பண்ணி இருப்போம்.. ஆனா பிளேயர்ல அந்த சப்டைட்டிலைக் காமிக்காது.. இந்தப் பிளேயர்ல நாம டவுன்லோட் பண்ணியிருக்கற சப்டைட்டிலை பிளேயர்ல இருந்தே புரெளஸ் ஆப்சன் மூலமா கண்டுபிடிச்சு ரன் பண்ண வைக்க முடியும்.. ஒரே நேரத்துல ஒன்னுக்கு மேற்பட்ட சப்டைட்டில் லோட் பண்ணி படம் பார்க்க முடியும்.. இந்த மாதிரி நிறைய ஆப்சன்ஸ் இருக்கு..

சப்டைட்டில் டிஸ்பிளே ஆகாத பட்சத்துல நான் இன்னொரு டிரிக்ஸ் யூஸ் பண்றேங்க.. நம்ம படத்தோட டைட்டில் "Flightplan[2005][Eng]" இப்படி இருக்கு சிஸ்டத்துல.. நாம டவுன்லோட் பண்ணியிருக்கற சப்டைட்டிலோட தலைப்பு "Flightplan[2005]" இப்படின்னு இருக்கு.. இப்போ படத்தை ரன் பண்ணினா சப்டைட்டிலைக் காமிக்காது.. ஆப்சன்ஸ் எல்லாம் கரெக்டா ஆன் ஆயிருக்கு.. ஆனா ஏன் காமிக்கலைன்னு நாம குழம்புவோம்.. இதுக்கு காரணம் படத்தோட டைட்டிலும்.. சப்டைட்டிலோட டைட்டிலும் வேற வேறயா இருக்கு.. இப்போ நாம சப்டைட்டிலையும் "Flightplan[2005][Eng]" அப்படின்னு ரீநேம் பண்ணீட்டோம்னா படம் சூப்பரா சப்டைட்டிலோட ரன் ஆகும்..
 
KMPlayer டவுன்லோட் பண்ண இங்கே கிளிக் பண்ணுங்க..
 

Monday, September 6, 2010

விரைவுப்பேருந்துகளில் முன்பதிவு சிக்கல்கள்..

ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் பயணம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிச்சிருக்கு.. நாம எல்லாரும் ஏதாவது விசயங்களுக்காக நம்ம சொந்த ஊர்ல இருந்து ஏதாவது ஒரு இடத்துக்கு பயணம் செய்துகிட்டுதான் இருக்கோம்.. சின்ன வயசுல நாம எல்லாருக்கும் பஸ்ல போறதுன்னா ரொம்ப பிடிக்கும்.. நம்ம வீட்டு ஆளுங்க எங்க போனாங்கன்னாலும் கூடவே போகனும்னு அடம் பிடிப்போம்.. அடிக்கடி எங்கேயாவது பஸ்ல போகணும்.. வேற எந்தக் காரணமும் இருக்காது இதுல..

சிறுவனா இருந்தப்போ பயணம் செய்றதுக்கு இருந்த குஷி கொஞ்சம் வளர்ந்துட்டோம்னா இருக்காது.. ஏன்னா சிறுவனா இருக்கறப்போ கிடைக்கற சீட்ல ஜாலியா உக்காந்துக்கலாம்.. படுத்துக்கலாம்.. ஆனா இப்போ வளர்ந்துட்டதால யோகா பண்ற மாதிரி ஸ்ட்ரைய்ட்டாவே உக்காந்துருக்கனும்.. பயணங்கள்ல ஏற்பட அசெளரியங்களால எப்படா போக வேண்டிய இடம் வரும்னு மனசுல புலம்பிக்கிட்டே.. ரோட்டோரமா வழிநெடுக நட்டு வைச்சிருக்கற கிலோமிட்டர் போர்டை பஸ் ஜன்னல் வழியா பார்த்துட்டே இருப்போம்.. அதுக்கு காரணம் மக்களுக்கு வசதியான இருக்கைகள் அரசாங்கப் பேருந்துகள்ல இருக்கறதில்லை..

அடுத்த கட்டமா பணி நிமித்தமா சென்னை, பெங்களூர் அப்படின்னு வேற ஊர்களுக்கு போயிடறோம்.. வேலை பார்க்கற இடங்கள்ல இருந்து லீவுக்கு ஊருக்கு போகணும்னா அரசாங்க பஸ்களை பிரிஃபர் பண்ண முடியாது.. ஏன்னா நம்ம ஊருக்கு போறதுக்கு 12, 15 மணிநேரங்கள் ஆகலாம்.. அரசாங்க பஸ்கள்ல போனா இடுப்பு கழண்டு போயிடும்.. அதனால பிரைவைட்டா ஓடற சொகுசு பஸ்களைத்தான் பார்க்க வேண்டியிருந்தது.. அந்தப் பயலுக என்னடான்னா.. நாம சாதாரணமாப் போற பஸ்ஃபேரை விட நாலு மடங்கு கட்டணம் சொல்லுவானுங்க.. விதியேன்னு போயிட்டுதான் இருப்போம்..

2007 ஆம் வருசத்துல தமிழ்நாடு அரசாங்கமே சொகுசு பேருந்துகள் விட்டாங்க.. ரொம்ப சந்தோசமா இருந்தது.. இனி அவ்லோ பஸ்ஃபேர் குடுக்க அவசியம் இல்லை பாருங்க..


புதுசா வந்திருக்கற அரசு சொகுசு பேருந்துகள்ல டிக்கெட் புக் பண்ணனும்னா சாதாரண விசயம் கிடையாதுங்க.. டிராவல் பண்றதுக்கு சீட் இருக்கான்னு செக் பண்ணனும் இல்லையா.. ஆனா இங்க இரயில்வே என்கொயரி மாதிரியோ, பிரைவேட் பஸ்கள்ல சீட் இருக்கான்னு செக் பண்றமாதிரியோ செக் பண்ணி சொல்லமாட்டாங்க.. நோ என்கெளயரின்னு போர்டே போட்டிருப்பாங்க..

முதல்ல புக்கிங் ஆபிஸ்ல போய் அவங்க கொடுக்கற ஃபாமை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கணும்.. சும்மா சாணித்தாள் குவாலிட்டில தாங்க இருக்கும் அந்த பேப்பர்.. அதுக்கு ஒரு ரூபாய்!!.. அரசாங்க பஸ் ஸ்டாண்டுலதான் ஆபிஸ் இருக்கும்கறதால ரொம்ப நேரம் கியூல நின்னுட்டே இருக்கணும்.. கியூ நகரவே நகராது.. ஒரு பத்து பேர் கியூல நின்னோம்னா நம்ம டர்ன் வர்றதுக்கு குறைஞ்சது ஒரு மணிநேரம் ஆயிடும்.. சரி அப்படி என்னதான் உள்ள வேலை பார்க்கறாங்கன்னுட்டு பார்த்தா.. கரெக்டா மூனு பட்டன்தாங்க அழுத்துவாங்க..

1. நாம ஃபாம்ல பில் பண்ணிக் குடுத்திருக்கற ரூட் நம்பர் ஒரு பட்டன்..
(பஸ்ல சீட் இருக்கான்னு அடுத்த விண்டோலயே தெரிஞ்சுடும்)

2. சீட் இருந்தா அதை செலக்ட் பண்ண ஒரு பட்டன்..

3. அப்புறம் டிக்கெட் பிரிண்ட் கொடுக்கற பட்டன்.. அவ்லோதாங்க..
(ஞாபகம் இருக்கட்டும் சீட் இல்லைன்னா ஒரே பட்டன் தாங்க..)

இதுக்குதான் இவ்லோ நேரம் பண்ணீங்களாடான்னு கடுப்பாயிடும்.. டிக்கெட் இல்லைனா இன்னும் எவ்வளவு கடுப்பாகும் பாருங்க..

அங்க கம்ப்யூட்டர் ஆபரேட் பண்றவங்களுக்கு கீபோர்டு பட்டனைத் தேடறதே பெரிய வேலையா இருந்தது.. அப்புறம் எப்படியும் பஸ் ஸ்டாண்டுக்குப் புதுசா வர்ற பஸ்கள்ல அவங்க ஜோஸ்துங்க வருவாங்க.. அவங்க கூட கொஞ்ச நேரம் குப்பை போடுவாங்க.. வெளியில நாம கால்கடுக்க நின்னுட்டே இருக்கணும்..

சரி பரவாயில்லை இப்போதான ஆரம்பிச்சிருக்காங்க.. எப்படியும் பொதுமக்கள் ஆன்லைன்ல அக்சஸ் பண்றமாதிரி பண்ணீடுவாங்கன்னு நினைச்சு மனசைத் தேத்திக்க வேண்டியதா இருந்தது..

இப்போ வருசம் என்னாச்சுங்க?.. இந்த டிரான்ஸ்போர்ட் ஆரம்பிச்சு 3 வருசம் ஆயிடுச்சுங்க.. இன்னும் பொதுமக்கள் ஆன்லைல அக்சஸ் பண்ற வசதி தரல.. அட்லீஸ்ட் டிக்கெட் இருக்கானு செக் பண்றதுக்காவது வசதி பண்ணிக்கொடுக்கலாம்.. அங்க வேலைப் பார்க்கறவங்களோட சோம்பேறிதனமான வேலையைத் தட்டிக்கேக்கலாம்னு எப்பவாவது பொங்கி எழுந்தோம்னா அன்னைக்கு உங்களுக்கு டிக்கெட் கிடைக்காது..

ஒருமுறை எங்க ஊர்ல இருந்து பெங்களூர் வர்றதுக்கு டிக்கெட் கிடைக்கலைங்க.. சரி என்னடா பண்றதுன்னுட்டு.. சேலம் வரைக்கும் போயிட்டு அங்க இருந்து இந்த சொகுசு பேருந்து ஒன்னைப் பிடிச்சு போயிடாம்னு தோணுச்சு.. சேலம் டூ பெங்களூர் பஸ் டைமிங் எனக்குத் தெரியும்ங்கறதால ஒரு ஃபாம் வாங்கி "சேலம் டூ பெங்களூர்" ரூட் நம்பர் எழுதி கொடுத்தேன்.. அதுக்கு அந்த ஆள் என்ன சொல்றார் தெரியுங்களா?.. நம்ம பஸ் சேலத்துல இருந்து ஓடறது இல்லைங்களே அப்படிங்கறார்.. என்னமோ அவருதான் பழனியில இருந்து பஸ் விட்டுட்டு இருக்கறமாதிரி!!.. இந்த சொகுசு பேருந்துகளை எந்த ஊர்ல இருந்தும் எந்த ஊருக்கும் புக் பண்ற வசதி இருக்கு.. ஆனா அந்த மூணு பட்டனை கிளிக் பண்ண அந்தாளுக்கு சங்கடம்.. சண்டை போட்டுட்டு இருக்க டைம் இல்ல.. ஆர்டினரி பஸ்லயே மாறி மாறி வந்துட்டேன்..

பணிநிமித்தமா ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்னை போயிருந்தேன்.. வேலை சாயங்காலம் 6 மணிக்கே முடிஞ்சது.. சரி ஒரு பத்து மணி பஸ்சுக்கு புக் பண்ணிட்டு.. கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணீட்டு வந்துடலாம்னு நினைச்சு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு போனேங்க.. அங்க என்ன சொல்றாங்கன்னா.. இப்போ பத்து மணி பஸ்சுக்கு புக்கிங் முடிஞ்சது.. ஒரு 9 மணி சுமாருக்கு ஆபிஸ் பேக் சைடு விண்டோல 10 ரூபாயிக்கு டோக்கன் தருவோம்.. அதை வேணா வாங்கிக்கங்கன்னு சொல்றாங்க.. இது என்ன அநியாயம்.. டிக்கெட் இருக்கப்போ அதைக் கொடுக்காம டோக்கன் கொடுக்கற மாதிரி ரூல்ஸ் இருக்கான்னு கேள்வி கேட்டேன்.. என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துட்டு பஸ் புல்லாயிடுச்சுன்னு சொல்லீட்டாங்க.. சரி ஆபிஸ் பேக்சைடை ஒருமுறை பார்த்துட்டு போயிடலாம்னு நினைச்சு அந்த விண்டோ பக்கம் போனா.. அப்பவே ஒரு பத்துபேர் கியூல நிக்கறாங்க.. அவங்க எல்லாம் அப்படி 10, 11 மணிகளுக்கு கிளம்பறதுக்கு டோக்கன் வாங்க நிக்கறாங்களாம்.. அப்புறம் எங்க பர்சேஸ்!!.. நானும் ஜோதியில ஐக்கியமாயிட்டேன்.. கால் கடுக்க நின்னுக்கிட்டு இருந்தேங்க.. கரெக்டா பெல் அடிச்ச மாதிரி 9 மணிக்கு பேக் விண்டோல டோக்கன் கொடுக்க ஆரம்பிச்சாங்க.. நம்ம மக்கள் அதுக்குள்ள கியூவை கொலாப்ஸ் ஆக்கிட்டாங்க.. அடிச்சு பிடிச்சு.. டோக்கனை வாங்கி பஸ்சுக்கு போனேன்..

ஒருமணி நேரம் பஸ்லயே வெயிட் பண்ண வேண்டியதாயிடுச்சு.. டோக்கன் வாங்கிட்டமேன்னு கீழே இறங்கி எல்லாம் நிக்க முடியல.. சீட்டை வேற யாராவது பிடிச்சுப்பாங்க.. அப்புறம் நாம பின்சீட்லதான் உக்காரவேண்டிய சூழ்நிலை.. பஸ் முழுவதும் மக்கள் இடம்பிடிச்சிட்டதால எல்லாரோட மூச்சுக் காற்றாலையும்.. சென்னை பருவநிலையாலவும் அந்த ஒருமணி நேரம் நரகமாவே ஆயிடுச்சு.. எப்பவும் சென்னை பஸ்கள்ல இப்படிதான் பண்ணுவாங்களா?.. இல்லை ஞாயிற்றுக்கிழமை நிறைய பேர் பணிகளுக்கு திரும்புவாங்கன்னு அப்படி பண்ணினாங்களா?.. இல்லை என் நேரமான்னு தெரியல..

இந்தக் கொடுமைகளை எல்லாம் தாங்க முடியலைங்க.. பெரும்பாலும் இப்ப பிரைவேட் பஸ்லயே போயிடறது.. டிக்கெட் கிடைக்காத பட்சத்துல அரசாங்க விரைவுப் பேருந்தை புக் பண்ண பஸ் ஸ்டாண்டு போற வரைக்கும்.. இப்போ நான் உங்களுக்கு சொன்னது எல்லாம் என் கண்ணு முன்னாடி ஸ்லைடு போட்டாமாதிரி வந்து போயிட்டே இருக்கும்..

இவ்வளவு பெரிய பதிவு என்னுடைய பாதிப்புகளை சொல்ல மட்டுமல்ல.. ஒவ்வொருத்தர் மனசுல இருக்கறதும் இதுதாங்க..பிரியத்துடன் வாழ்த்த வாங்க..

உலகத்துல ரொம்ப மரியாதைக்குரிய வார்த்தை நட்பு..

எல்லாருக்கும் குறைஞ்சது ஒருத்தராவது நெருங்கின நண்பர்களா இருப்பாங்க.. ஒரே மாதிரி குணாதிசியங்கள் இருக்கறவங்கதான் கண்டிப்பா நெருங்கின நண்பர்களாக இருக்க முடியும்னு சொல்வாங்க..

எனக்கும் ஒரு பெஸ்ட் பிரண்ட் இருக்கார்.. கண்டிப்பா ரெண்டு பேரும் நண்பர்களாக இருக்கறதே உலக அதிசயந்தான்.. அவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருக்கும் எங்களுக்குள்ள.. ரெண்டு பேரும் எல்லா விசயங்களுக்கும் சண்டை போட்டுட்டேதான் இருப்போம்.. ரொம்பக் கடுமையாகக்கூட சண்டை போடுவோம்.. எவ்வளவு சண்டை போட்டாலும் என் நண்பன் அப்படிங்கற புரிதல் எங்களுக்குள்ள இருக்கும்..
ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒன்னாதான் சுத்துவோம்.. எங்க ரெண்டு பேரோட முக அமைப்புகள் ஒரே மாதிரியா இருக்கறதால நிறைய பேர் எங்களை அண்ணன், தம்பின்னு கூட நினைக்கறாங்க..
 ஆபிஸ்ல நிறைய பேருக்கு எங்க பேர்கள்லயே குழப்பம்.. எங்க பேரை மாத்தி மாத்திதான் கூப்பிடுவாங்க.. அப்படி கூப்பிடறவங்களையும் நாங்க திருத்தறதுல்ல..

அவருக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருக்குங்க.. கல்யாணத்துக்குப் பத்திரிக்கை அடிக்கறப்போ என் சார்பாக நீதாண்டா நம்ம நண்பர்களை அழைக்கனும்னு கேட்டார்.. எனக்கு ரொம்ப சந்தோசமாவும் கெளரவமாவும் இருந்தது..
யார் இப்படியெல்லாம் சொல்வாங்க.. என்மேல எவ்வளவு மரியாதையாவும் நட்பாகவும் இருக்கார் பாருங்க.. நண்பர்கள் எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்து நான் அழைச்சபோது.. "Abdul Invites" அப்படிங்கற வார்த்தைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டாங்க.. எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது..
நான், ரமேஷ்
கல்யாணத்துக்கு ரொம்ப குஷியா ஊருக்குப் போயிட்டார் நண்பர்.. எனக்குத்தான் சண்டை போடவும்.. திட்டவும் ஆள் இல்ல இப்போ.. ஹா ஹா ஹா..

சரிங்க மேட்டருக்கு வர்றேன்..

நம்ம நண்பர் பிரியமுடன் ரமேஷுக்கு செப்டம்பர் 12 ஆம் தேதி கல்யாணங்க.. அழைப்பிதழை இந்தப் பதிவுல அட்டாச் பண்ணியிருக்கேன்.. எல்லாரும் கண்டிப்பா வந்து மணமக்களை வாழ்த்தி கல்யாணத்தை சிறப்பா நடத்திக் கொடுக்கணும்னு கேட்டுக்கறேன்..

நட்புடன்

அப்துல்காதர் (எ) பாபு.


Thursday, September 2, 2010

கல்யாணத்துக்கு கலக்கலா கூப்பிடுங்க..

என்னோட நண்பர் ஒருத்தருக்கு இந்த மாசம் கல்யாணங்க.. கல்யாணத்துக்கு இன்வைட் பண்றதுக்கு புதுசா ஏதாவது ட்ரை பண்ணலாமேன்னு நினைச்சிட்டு.. நண்பர்களுக்கு ஆன்லைன்ல இன்வைட் பண்றதுக்கு வசதியா ஒரு வலைப்பதிவு கிரியேட் பண்ற திட்டத்துல இருந்தோம்.. அதைப் பத்தின தேடுதல்ல இருந்தப்போதான் ஒரு வலைத்தளம் பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சது..

அது ஆன்லைன் இன்விடேசன் கிரியேட் பண்ணிக்கற வலைத்தளம்.. பிளாக்கர்ல நமக்குன்னு ஒரு தளம் கிடைக்கற மாதிரியே இதுலயும் நமக்குன்னு ஒரு தளத்தைக் கிரியேட் பண்ணிக்கலாம்.. அந்த சைட்ல இன்விடேசன் கிரியேட் பண்றதுக்காக அழகழகான டெம்பிளேட்டுகளை வச்சிருக்காங்க..

நாம செய்ய வேண்டியது "http://www.invity.com/register.php" இந்த முகவரிக்குப் போய் யூசர் ஆயிடனும்.. அந்த பிராசஸ்ல நாம கிரியேட் பண்ணப்போற ஆன்லைன் இன்விடேசனோட URLஐக் கிரியேட் பண்ணச்சொல்லும்.. கொடுத்துட்டோம்னா வேலை ஓவர்.. அப்புறம் அதுல இருக்கற டிசைன்களைப் பார்த்து நமக்கு பிடிச்சமாதிரி இன்விடேசனை உருவாக்க முடியும்.. அதுலயும் பிரிமியம் யூசர் ஆயிட்டோம்னா ஏகப்பட்ட வசதிகளைக் கொடுக்கறாங்க.. ஆனா ஃப்ரீ யூசர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கற வசதிகளே ரொம்ப நல்லாயிருக்கு..

1. பொண்ணு, மாப்பிள்ளை போட்டுக்களைப் போடறதுக்கு ஃபோட்டோ கேலரி
2. நண்பர்கள் வாழ்த்தறதுக்கு வசதி
3. கல்யாணத்துக்கு அடிச்ச பத்திரிக்கையையும் ஸ்கேன் பண்ணி இதுல போடலாம்
4. நம்ம விரும்பறவங்க மட்டுமே பார்க்கறதுக்கு ஏதுவா வைப்சைட்டை லாக் பண்ணிக்கலாம்
5. கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் எல்லாருக்கும் நம்ம வைப்சைட்ல இருந்து நன்றி தெரிவிக்கலாம்

இந்த மாதிரி நிறைய வசதிகள் இருக்கு.. இந்த மேட்டரை உங்களுக்கும் ஷேர் பண்ணனும்னு தோணுச்சு.. ட்ரை பண்ணிப் பாருங்க..


BPO பதவியில் உயர்வும் சரிவும்..
இரண்டாம் பாகம்

BPO ஜாப் வாங்கி.. வேலை செஞ்சு.. அதுல நம்மள்ல ஒருத்தர டீம் லீடர் ஆக்கிட்டோம் ஞாபகம் இருக்கு இல்லையா..

இங்க ஒரு டீம் லீடரா என்னன்ன பொறுப்புகள் இருக்கு.. ஒவ்வொரு வாரமும் நம்ம டீம் மெம்பர்சைக் கூப்பிட்டு திட்டனும்.. அப்புறம் புகழனும்.. இது ரொம்ப முக்கியம்.. இதுவரைக்கும் நமக்குன்னு இருந்த டீம் லீடர்கிட்ட ரிப்போர்ட் பண்ணிட்டு இருந்தோம்.. இப்போ பிராஜெக்ட் மேனேஜர்கிட்ட ரிப்போர்டிங்..

அப்பாடா.. இனிமேல் எந்த டைமிங்க்கு வேணா வரலாம்.. போலாம்.. நமக்குன்னு ஒரு எடுபிடின்னு நாம நினைச்சிட்டு இருப்போம்.. ஆனா கதையே வேறமாதிரி நடக்கும்.. ஆபிஸ் டைமிங்க்கு அட்லீஸ்ட் ஒருமணி நேரத்துக்கு முன்னயே வரவேண்டியிருக்கும்.. அப்புறம் ஆபிஸ் முடிஞ்சு எல்லாரும் போனதுக்கு அப்புறமும் கண்டிப்பா ஏதாவது ஒரு வேலை இருக்கும் பிராஜெக்ட் மேனேஜர்கிட்ட கொடுக்கறதுக்கு.. என்னடா இது!! பெண்டு நிமிருது.. நம்ம டீம் லீடர் இவ்வளவு வேலை பார்த்தமாதிரி தெரியலையேன்னு நினைச்சிட்டு இருப்போம்.. ஆக்சுவலா நம்மளாலும் வேலை செய்யாம OP அடிக்க முடியும்.. நம்ம சின்சியாரிட்டி அதுக்கு விடாது.. கண்டிப்பா வேலை செஞ்சுட்டேதான் இருப்போம்..

இதுக்கு இடையில.. டீம் லீடர் பதவின்னா என்னன்னு உணர ஆரம்பிப்பிங்க.. என்னன்னா.. டீம் மெம்பர்ஸ் செய்ற செய்கைகளை மேனேஜ்மென்ட் கிட்ட போட்டுக் கொடுக்கறது.. ஆனா அந்த வேலையே நமக்குப் பிடிக்காது.. ஒருத்தர் தப்பு பண்ணியிருந்தாலும் அந்த பிரச்சனை நம்மோட பிராஜெக்ட் மேனேஜர்கிட்ட போகாம அவங்களைத் திருத்தத்தான் பார்ப்போம்.. ஆனா நம்ம மேனேஜர் என்ன நினைப்பார்.. என்னடா இவன் ஒரு கேஸ்கூட புடிக்க மாட்டேங்கறான்.. இவன் லாயக்கு இல்லன்னு முடிவு கட்டிட்டு.. நம்மளக் கூப்பிட்டு ஒழுக்கமா கேஸ் புடிச்சுட்டுவா இல்லைனா நல்லாயிருக்காதுன்னு எச்சரிக்கை செய்வார்.. நமக்கு அப்பவும் புத்தி வராது..
மாசம் ஒருமுறையாவது மேனேஜ்மென்ட்ல மீட்டிங் வைப்பாங்க.. மீட்டிங்கல இதை ஏன் சரியா செய்யலைன்னு ஏதாவது விசயத்தைப் பத்திக் கேட்டா.. இதுக்கெல்லாம் லீடர்தான் காரணம்னு கூசாம சொல்வாங்க நம்ம டீம் மெம்பர்ஸ்.. ஒவ்வொரு பிரச்சினைலயும் நாம காப்பாத்திட்டு வந்த டீம்.. இப்படி சொல்றாங்களேன்னு இருக்கும் நமக்கு..

திடீர்னு ஒரு திருப்பம் நடக்கும்.. நம்ம எடுபிடி இருக்கான் இல்லையா.. அவனையும் டீம் லீடர் ஆக்கிடுவாங்க.. நாம திருதிருன்னு முழிப்போம்.. இப்போ 2வது வருச அப்ரைசல் நடக்கும்.. நமக்கு இருக்கற ஆங்கிலப் புலமைக்கு இதுக்கு மேலயும் பதவி உயர்வு தரமாட்டாங்க.. ஆனா அதே பதவியில சம்பளம் உயர்வு மட்டும் கொடுத்தா.. அது நிர்வாகத்திற்கு நஷ்டம்னு அவங்க கணக்குப் பண்ணி.. நமக்கு தேவையில்லாம ஏதாவது பிரசர் தர ஆரம்பிப்பாங்க..

நமக்கு எப்படா இங்க இருந்து ஓடுவோம்னு வேற வேலை தேட ஆரம்பிப்போம்..

வேற கம்பெனிகள்ல போய் வேலை தேடினா.. இதே பதவியிலயே வேலை கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கும்.. அதுதான் BPO வேலை.. ஏன்னா இதுக்கு முன்னாடி இருந்த கம்பெனியில நம்ம ஆங்கில அறிவை பயன்படுத்தாம.. கடுமையா உழைச்சி இந்தப் பதவியை அடைஞ்சிருப்போம்.. அதனால அதுக்கு சமமான வேற வேலையில சேருவோம்..

ஒரு டீமை மெயின்டெயின் பண்ணனும்னா நிறைய பொறுப்புகள் இருக்கத்தான் செய்யும்.. BPO வேலையில குப்பை கொட்டனும்னா நண்டு கதை மாதிரிதாங்க.. POOR, AVERAGE இந்த ரெண்டு வகையில இருக்கறவங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது.. GOOD இந்த வகையில வேலை செய்றவங்களுக்குத்தான் இங்க பிரச்சினைகளே.. இங்க வேலை செய்றதுக்கு நமக்கு வேலைத் திறமை இருந்தா மட்டும் போதாது.. நம்மகூட திறமையா வேலை பார்க்கறவங்களைப் பத்தி நிர்வாகத்துகிட்ட இல்லாததும் பொல்லாததும் போட்டுக்குடுக்கணும்.. அதைத்தான் நிர்வாகமும் விரும்பும்.. ஏன்னா அவங்களுக்கு ஒரு உளவாளி தேவைப்படறாங்க.. அதனால நம் காலை பிடிச்சு எவனாவது இழுத்து விட்டு முன்னேறினாலும் அவன் காலை இன்னொருத்தன் கண்டிப்பா இழுத்து விடுவான்.. இப்படி நண்டு மாதிரி செயல்பட்டுக்கிட்டே இருக்கறதுதான் இந்த வேலை..

நான் சொன்ன இந்தத் தகவல்கள் புதுசா BPO வேலைக்கு சேரப் போறவங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்னு நினைக்கிறேன்..

நன்றி..